மயிலாப்பூர் தம்பதி கொலையில் குற்றவாளிகள் விரைந்து கைது: போலீசாருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
மயிலாப்பூர் தம்பதி கொலையில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த சென்னை போலீசாரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பாராட்டினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை,
கடந்த 7-ந்தேதி சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி அனுராதா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், அவனது கூட்டாளி ரவிராய் ஆகியோர் சென்னை மாநகர காவல்துறையினரால் ஆந்திர காவல்துறையினர் உதவியுடன் ஓங்கோலில் கைது செய்யப்பட்டனர்.
மேலும் குற்றவாளிகளிடம் இருந்து 1,127 பவுன் தங்க நகைகள், 2 வைர மூக்குத்திகள், வெள்ளி நகைகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த மயிலாப்பூர் துணை கமிஷனர் திஷா மிட்டல், உதவி கமிஷனர்கள் எம். குமரகுருபரன், டி.கவுதமன், இன்ஸ்பெக்டர் எம்.ரவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சி.கிருஷ்ணன், வி.மாரியப்பன், எம்.அன்பழகன், போலீஸ்காரர்கள் டி.சங்கர் தினேஷ், எஸ்.கதிரவன் ஆகியோரை சென்னை தலைமை செயலகத்துக்கு நேரில் வரவழைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியின் போது உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் கமிஷனர் என்.கண்ணன், இணை கமிஷனர் (தெற்கு) பிரபாகரன் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story