தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியது
தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து அ.தி.மு.க. தலைவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வியாழக்கிழமை நிறைவேறியது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து அ.தி.மு.க. தலைவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வியாழக்கிழமை நிறைவேறியது.
மாவட்ட பஞ்சாயத்து
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடத்தப்பட்டது. 17 உறுப்பினர்களை கொண்ட மாவட்ட பஞ்சாயத்தில் அ.தி.மு.க. 12 வார்டு உறுப்பினர்களையும், தி.மு.க. 5 வார்டு உறுப்பினர்களையும் பெற்றது.
தொடர்ந்து நடந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த 5-வது வார்டு உறுப்பினர் சத்யா தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதே போன்று 10-வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினர் செல்வக்குமார் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அதன்பிறகு நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து துணைத்தலைவர் செல்வக்குமார் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து வந்தார்.
கவுன்சிலர் கூட்டம்
இந்த நிலையில் கடந்த 4.4.22 அன்று மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா மீது, மாவட்ட கவுன்சிலர்கள் 15 பேர் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் கடிதத்தை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம் வழங்கினர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் 5 பேர், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 9 பேர் ஆக மொத்தம் 14 பேர் பங்கேற்றனர். தலைவர் சத்யா, 6-வது வார்டு பிரியா, 13-வது வார்டு பேச்சியம்மாள் ஆகிய 3 பேர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் குமார் முன்னிலை வகித்தார்.
தீர்மானம்
கூட்டத்தில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை கலெக்டர் செந்தில்ராஜ் வாசித்தார். தொடர்ந்து தலைவர் சத்யா அளித்த பதிலையும் வாசித்தார். அதன்பிறகு நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவளிப்பவர்கள் கையை தூக்குமாறு கூறினார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற 14 பேரும் தீர்மானத்தை ஆதரித்தனர். இதனால் தலைவர் சத்யாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து ஒவ்வொரு கவுன்சிலரும் தனித்தனியாக சென்று கூட்டத்துக்கான `மினிட்' புத்தகத்தில் கையெழுத்திட்டனர். இந்த நடைமுறைகள் அனைத்தும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது.
வாழ்த்து
இதைத் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்று நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளித்த கவுன்சிலர்களை, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர், ஜெயக்குமார் ரூபன், வக்கீல் ரகுராமன், ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் இளையராஜா உள்பட ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
அ.தி.மு.க. ஆதரவு
தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து அ.தி.மு.க. தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆதரவு அளித்து இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த கூட்டம் குறித்த தகவல்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அதன்பிறகு தலைவர் நீக்கம் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும். அதனை தொடர்ந்து, புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story