ராட்டின உரிமையாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு


ராட்டின உரிமையாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 12 May 2022 6:54 PM IST (Updated: 12 May 2022 6:54 PM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக ராட்டின உரிமையாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் கலெக்டர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தேனி:

 தொழிலாளி சாவு

தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 10-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த விழாவுக்காக கோவில் அருகில் உள்ள திடலில் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த ராட்டினங்களுக்கு ஜெனரேட்டர்கள் மூலம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இந்த ராட்டின திடலில், மின் விளக்குகளை சரி செய்யும் பணியில் உப்பார்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் (வயது 36) ஈடுபட்டார்.

அப்போது ஒரு ராட்டினம் அருகில் இரும்பு கம்பத்தில் பொருத்தப்பட்டு இருந்த மின் விளக்கை சரி செய்வதற்காக இரும்பு ஏணியை அவர் தூக்கிச் சென்றார். அந்த ஏணியை இரும்பு கம்பத்தில் சாய்த்த போது அந்த கம்பத்தில் மின் கசிவு இருந்துள்ளது. இதனால், மின்சாரம் பாய்ந்து அவர் பலியானார்.

4 பேர் மீது வழக்கு

இதுகுறித்து பலியான முத்துக்குமாரின் மனைவி சுமித்ரா, வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

அந்த புகாரில், போதிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியில் ஈடுபடுத்தியதே விபத்துக்கு காரணம் என்றும், ராட்டின உரிமையாளர் மற்றும் ஏலதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கூறியிருந்தார்.

அதன்பேரில் ராட்டினத்தின் உரிமையாளரான வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த மோகன், கோவில் திருவிழாவையொட்டி ராட்டின திடலை ஏலம் எடுத்த வீரபாண்டியை சேர்ந்த தங்கதுரை, அவருடைய பங்குதாரர்களான தேனியை சேர்ந்த குணசேகரன், வயல்பட்டியை சேர்ந்த ரமேஷ் ஆகிய 4 பேர் மீதும் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாரிகள் ஆய்வு

மின்சார விபத்து ஏற்பட்டவுடன் மறுஉத்தரவு வரும் வரை ராட்டினங்களை இயக்க கூடாது என்று மாவட்ட கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். ராட்டின திடலை தேனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன் தலைமையில் மின்வாரிய அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். ராட்டினங்கள் மற்றும் மின் விளக்குகளுக்கு வழங்கப்பட்ட இணைப்புகள் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர்.

இதேபோல் மின்சார ஆய்வாளர் துறையின் திண்டுக்கல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான குழுவினரும் ராட்டின திடலில் ஆய்வு மேற்கொண்டனர். விபத்து நடந்த இடம் தவிர வேறு எங்காவது மின் கசிவு உள்ளதா? என அவர்கள் தீவிர ஆய்வில் ஈடுபட்டனர். இதனால், 2-வது நாளாக நேற்றும் ராட்டினங்கள் இயக்கப்படவில்லை.

Next Story