நாமக்கல் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 62 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கப்படுகிறது கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 62 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கப்படுகிறது கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்
x
தினத்தந்தி 12 May 2022 7:12 PM IST (Updated: 12 May 2022 7:12 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 62 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கப்படுகிறது கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 62 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் ஸ்ரேயா சிங் கூறினார்.
இல்லம் தேடி கல்வி திட்டம்
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு நேரடியாக வந்து கல்வி கற்க முடியாத சூழல் இருந்தது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படாமல் இருக்கவும், கற்றல் திறனை வலுப்படுத்தவும், 2 ஆண்டு காலமாக நிலவிய கற்றல் இடைவெளியை போக்கவும் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளின் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சமுதாயக்கூடம் போன்ற பொது இடங்களில் போதிய இடைவெளியில் மாணவ, மாணவிகளை அமர வைத்து தன்னார்வலர்களை கொண்டு எளிய முறையில் தினசரி 1 மணி நேரம் முதல் 1½ மணி நேரம் வரை கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
கலெக்டர் ஆய்வு
நாமக்கல் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்த அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே உள்ள இடங்களில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் 4,553 பெண் தன்னார்வலர்கள் மூலம் 62,083 மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எர்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இல்லம் தேடி கல்வி திட்ட முகாமை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கீரம்பூர் அரசு துணை சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, ஊராட்சியின் மூலம் துணை சுகாதார நிலையத்திற்கு குடிநீர் வசதி கிடைப்பதை செவிலியரிடம் கேட்டறிந்தார்.
மேலும் கர்ப்பிணிகளுக்கு எடை பார்க்கும் கருவி, 1 வயதிற்கு குறைவான குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிப்பதற்கான எடை பார்க்கும் கருவி ஆகியவை இருப்பதை பார்வையிட்டு உறுதி செய்தார். தற்போது மகப்பேறு சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை மற்றும் பெயர் விவரங்களையும் கேட்டறிந்தார்.
ஆரம்ப சுகாதார நிலையம்
குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அவர்களின் உடல் நிலையை சீராக்க ஓ.ஆர்.எஸ். கரைசல் பொட்டலங்கள் உள்ளனவா? என்றும், காய்ச்சல், இருமலுக்கான மருந்துகள் இருப்பில் உள்ளனவா? என்றும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து திண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் பதிவேடுகள் மற்றும் கருவிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின்போது துணை இயக்குநர் (சுகாதாரம்) பிரபாகரன், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் உள்பட மருத்துவர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர்.

Next Story