‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 12 May 2022 7:34 PM IST (Updated: 12 May 2022 7:34 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாய்ந்த மின் கம்பம் தலை நிமிர்ந்தது

சென்னை சூளைமேடு வீரபாண்டிய நகர் 3-வது தெருவில் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் இருப்பது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மின் வாரியத்தின் துரித நடவடிக்கையால் சாய்ந்த மின் கம்பம் தலை நிமிர்ந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் மின்வாரியத்துக்கும், துணை புரிந்த ‘தினத்தந்தி’க்கும் பாராட்டை தெரிவித்தனர்.

வடிகால்வாய்க்கு மூடி கிடைத்தது

சென்னை வேளச்சேரி நியூ செக்ரடேரியட் காலனி 2-வது தெரு நுழைவு வாயில் அருகே இருக்கும் மழைநீர் வடிகால்வாய் மூடி இல்லாமல் ஆபத்தாக காட்சி தருவது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் சுட்டிகாட்டப்பட்டது. இதற்கு தீர்வு கிடைக்கும் விதமாக மழைநீர் வடிகால்வாய்க்கு மாநகராட்சி அதிகாரிகளின் முயற்சியினால் மூடி கிடைத்துள்ளது. உடனடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும். புகாரை பதிவு செய்த ‘தினத்தந்தி’க்கும் மக்கள் நன்றியை தெரிவித்து உள்ளனர்.

ஆபத்தான நிலையில் மின்கம்பம்

சென்னை முகப்பேர் கிழக்கு 4-வது பிளாக் நக்கீரன் சாலையில் உள்ள அரச மர கிளைகளுக்கு இடையே மின்கம்பம் உள்ளது. இந்த நிலையில் மரம் ஆடும்போது மின்கம்பமும் சேர்ந்து ஆடுகிறது. இதனால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே விபரீதங்கள் ஏற்படும் முன்பு இந்த மின்கம்பத்தை இடம் மாற்றி நட வேண்டும்.

- சேகர், முகப்பேர் கிழக்கு.



வடிகால்வாய் வேண்டி விண்ணப்பம்

சென்னை கொளத்தூர் புத்தகரம் எஸ்.பி.ஓ.ஏ. டீச்சர்ஸ் நகர் முதல் தெருவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் சிறு மழை பெய்தாலே தெரு முழுவதும் மழைநீர் தேங்கிவிடுவதால் எங்கள் பகுதி மக்கள் மழைக் காலங்களில் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மழைநீர் வடிகால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

- விஷான், கொளத்தூர்.

சாலையில் தேங்கும் கழிவுநீர்

பூந்தமல்லியிலிருந்து சென்னீர்குப்பம் அரசினர் மேல்நிலை பள்ளி வழியே செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இந்த வழியாக பயணம் செய்யும் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் பல்வேறு சிரமங்களுக்கிடையே பயணம் செய்கிறார்கள். எனவே கழிவுநீரை முழுவதுமாக அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

- நித்தீஷ், பூந்தமல்லி.'



காட்சிப் பொருளான நிழற்குடை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து சித்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள செருக்கனூர் செல்லும் வழியில் பயணியர் நிழற்குடை உள்ளது. நீண்ட நாட்களாக பொதுமக்களுக்கு பயன்பெறாமலும், பராமரிப்பு இல்லாமலும் உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயணியர் நிழற்குடையை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

- லோகநாதன், செருக்கனூர்.

செல்லரித்த மின்கம்பம் சரிசெய்யப்படுமா?

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் பெரியபாளையம் கிரகபிரவேச நகரில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. மின் கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் ஆபத்தாக காட்சி தருவதால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பாக சேதமடைந்த மின்கம்பத்தை மின் வாரிய அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.

- கோபி, எல்லாபுரம்.

உடைந்த நடைபாதை சரி செய்யப்படுமா?

சென்னை போரூர் மற்றும் அய்யப்பன்தாங்கலுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரி அமைந்திருக்கும் சாலையை ஒட்டிய நடைபாதை உடைந்து காணப்படுகிறது. தினமும் ஆஸ்பத்திரிக்கு சென்று வர நோயாளிகளும், பொதுமக்களும் இந்த நடைபாதையை தான் பெரிதும் பயன்படுத்துகின்றனர். எனவே நடைபாதையை விரைந்து சரி செய்யப்பட வேண்டும்.

- பொதுமக்கள்.



சிரமம் தீர வழி பிறக்குமா?

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பெரியவிப்பேடு கிராமத்தில் 150-க்கும் மேலான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இறப்பு நிகழ்ந்தால் உடல்களை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல 2 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய வேண்டி உள்ளது. இறந்த சடலங்களை எடுத்து செல்லும் பாதையானது முட்புதர்களும், கரடு முரடாகவும் இருக்கிறது. மேலும் ஒரு சிறிய ஓடை உள்ளதால் மழை மற்றும் பேரிடர் காலங்களில் சடலங்களை தண்ணீரில் மிதந்து கொண்டு தான் எடுத்து செல்ல வேண்டியுள்ளது. சுடுகாட்டுக்கு செல்ல ஒரு பாதை இல்லாமல் தவிக்கும் எங்களுக்கு விடை கிடைக்குமா?

- தமிழ்பிரியன், திருப்போரூர்.

அபாயமான பாதாள சாக்கடை...

சென்னை விருகம்பாக்கம் சேக் அப்துல்லா நகர் முதலாவது மெயின் ரோடில் உள்ள கங்கை தெரு, யமுனை தெரு மற்றும் கோதாவரி தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் சில இடங்களில் மூடி இல்லாமல் திறந்த நிலையில் ஆபத்தாக காட்சி தருகிறது. மேலும் சாலையில் பயணம் செல்லும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் உள்ள இந்த பாதாள சாக்கடைக்கு மூடிகளை உடனடியாக பொருத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

- ஜாகிர், விருகம்பாக்கம்.




Next Story