காங்கிரசில் ரூ.8 கோடி மோசடி செய்தேனா?; நடிகை ரம்யா விளக்கம்
காங்கிரசில் ரூ.8 கோடி மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு நடிகை ரம்யா விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூரு:
எம்.பி.பட்டீலுக்கு ஆதரவு
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயணுக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் காங்கிரஸ் பிரசார குழு தலைவர் எம்.பி.பட்டீலை மந்திரி அஸ்வத் நாராயண் ரகசியமாக சந்தித்து பேசியதாக டி.கே.சிவக்குமார் கூறினார்.
இதை 2 பேரும் மறுத்தனர். இந்த விஷயத்தில் எம்.பி.பட்டீலுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை ரம்யா தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று புதிதாக ஒரு கருத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
வாழ முடியாது
நான் காங்கிரசில் இருந்து வெளியேறிய பிறகு, ரம்யா ரூ.8 கோடி மோசடி செய்துவிட்டு ஓடிவிட்டார் என்று தகவல்கள் பரவின. கர்நாடகத்தில் எனது நம்பகத்தன்மையை அழிக்க சிலர் இத்தகைய செய்தியை வேண்டுமென்றே உருவாக்கினர். நான் எங்கும் ஓடவில்லை. நான் எனது தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சியில் இருந்து விலகினேன். நான் ரூ.8 கோடியை ஏமாற்றவில்லை. நான் இவ்வளவு நாளாக அமைதியாக இருந்தது எனது தவறு.
கட்சியின் முன்னணி தலைவர் வேணுகோபாலை நான் கேட்டு கொள்வது, நீங்கள் கர்நாடகம் வரும்போது, இதுபற்றி விளக்கி கூறுங்கள். எனக்காக நீங்கள் இதை செய்யுமாறு கேட்கிறேன். இந்த பழிச்சொல், விமர்சனங்களை தாங்கி கொண்டு என்னால் தொடர்ந்து வாழ முடியாது.
இவ்வாறு ரம்யா குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story