ரேஷன் கடைகளில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு


ரேஷன் கடைகளில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 May 2022 8:04 PM IST (Updated: 12 May 2022 8:04 PM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடைகளில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

ிருப்பூர்
ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால் மக்கள் பொருட்களை பெற முடியாமல் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்று மக்கள் பிரதிநிதிகள் குற்றம்சாட்டினார்கள்.
புதிய ரேஷன் கடைகள்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் திஷா கமிட்டி நடைபெற்றது. கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்த கோரிக்கைகள் விவரம் வருமாறு:
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் நொய்யல் கரையில் உள்ள மக்களுக்கு மட்டும் அடுக்குமாடி வீடு பெற, வங்கிக்கடன் உதவி செய்து ஒதுக்கீடு செய்துள்ளது. ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம் ஓடையில் வசிக்கும் மக்களுக்கும் எளிய தவணை முறையில் அடுக்குமாடி வீடு வழங்கி அவர்களை குடியமர்த்த வேண்டும். மாவட்ட முன்னோடி வங்கி மூலமாக எளிய தவணையில் கடன் செலுத்தும் வகையில் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
திருப்பூர் மாநகராட்சி பகுதி ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் பதிவை கட்டாயமாக்குகின்றனர். இதனால் முதியோர் சிரமப்படுகிறார்கள். அதிக கார்டுகள் உள்ள கடைகளை பிரித்து புதிய கடைகளை தொடங்க வேண்டும். வாடகை கட்டிடத்தில் இயங்கும் கடைகளுக்கு சொந்த கட்டிடம் அமைக்க முயற்சி செய்ய வேண்டும். நடமாடும் ரேஷன் கடைகளை முறையாக செயல்படுத்த வேண்டும். மளிகை பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்கிறார்கள். அவ்வாறு செய்யக்கூடாது என்று பணியாளர்களுக்கு உத்தரவிட வேண்டும்.
அலைக்கழிக்கக்கூடாது
முதியோர்களை அலைக்கழிக்காமல் பொருட்களை வழங்க வேண்டும். அரிசி தரமற்றதாக வினியோகம் செய்கிறார்கள். ஆனால் தரமற்ற அரிசியை திரும்பி கொடுக்கலாம் என்று அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களுக்கு தரமான அரிசி கிடைக்கச்செய்ய வேண்டும். மாநகரில் ரேஷன் கடை ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் 2 கடைகளை ஒருவரே நிர்வகிப்பதால் வாரத்தில் எந்த நாட்கள் ஒரு ரேஷன் கடையில் இருப்பார் என்ற விவரத்தை தெரிவிக்காததால் தினமும் மக்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள். 
சாமளாபுரம் பேரூராட்சி பகுதியில் சிலர் எந்தவித அனுமதியும் இல்லாமல் மின் இணைப்பு பெற்றுள்ளனர். புதிய வரி விதிப்பு செய்யப்படாமல் இருப்பதால் மின் இணைப்பு பெற முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். அவசர தேவைகளுக்கு பழைய விகிதப்படி சொத்துவரி விதிப்பு செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, ரேஷன் கடையில் முதியவர்கள் உள்ளிட்ட யாரையும் அலைக்கழிக்காமல் பொருட்களை வழங்க வேண்டும். கைரேகை விழாமல் இருந்தாலும் பதிவேட்டில் குறிப்பிட்டு பொருட்களை வழங்க வேண்டும். தரமான அரிசியை கடைகளில் வினியோகிக்க வேண்டும். தரமற்ற அரிசி இருந்தால் அவற்றை குடோனுக்கு அனுப்பி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதுபோல் மக்களும் தரமற்ற அரிசி வினியோகம் செய்தால் வாங்க வேண்டாம். அதிகாரிகளின் கவனத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.
வங்கிக்கடனுதவி
கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரி அலெக்சாண்டர் கூறும்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நீர்நிலை புறம்போக்கில் குடியிருந்தவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கப்படுகிறது. மக்களின் பங்குத்தொகையாக ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் செலுத்த வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இருந்து தலா ரூ.50 ஆயிரம் கொடுக்கப்படுகிறது.
மகளிர் சுயஉதவிக்குழுவை தொடங்க வைத்து அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வங்கிக்கடனுதவி வழங்கப்படுகிறது. மீதம் உள்ள தொகையை பயனாளி செலுத்த வேண்டும். திருப்பூர் ஆலங்காடு பகுதியில் மட்டும் 140 பேருக்கு வங்கிக்கடனுதவி செய்து கொடுத்து வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளனர். மாநகர பகுதியில் மற்றவர்களுக்கும் இதுபோல் வங்கிக்கடனுதவி கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்றார்.

Next Story