பேட்டையில் போலீஸ் பாதுகாப்புடன் ரூ.1 கோடி விவசாய நிலம் மீட்பு
பேட்டையில் போலீஸ் பாதுகாப்புடன் ரூ.1 கோடி மதிப்பிலான விவசாய நிலத்தை இந்து அறநிலைய துறை அதிகாரிகள் மீட்டனர்.
பேட்டை:
நெல்லையை அடுத்த பேட்டை முள்ளிகுளம் அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மற்றும் பிள்ளையன் கட்டளை, மேடை தளவாய் கட்டளைக்கு பாத்தியப்பட்ட சுமார் 80-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு இடுபொருட்கள், வேளாண் உற்பத்தி பொருட்கள் கொண்டு செல்வதற்கு தடை ஏற்படுத்தும் விதமாக, ஒரு தனி நபர் சுற்றுச்சுவர் அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள், அறநிலையத்துறை மற்றும் பிள்ளையன் கட்டளை, மேடைதளவாய் கட்டளை நிர்வாக அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.
இதையடுத்து நெல்லை தாசில்தார் சண்முக சுப்பிரமணியன், துணை தாசில்தார் குமார், வருவாய் அலுவலர் மாரிதுரை, இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அதிகாரிகள் சிவசுந்தரேசன், ராம்குமார், மாரியப்பன் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனர். நெல்லை டவுன் துணை கமிஷனர் விஜயகுமார் தலைமையில் பேட்டை இன்ஸ்பெக்டர்கள் ஹரிகரன், ராஜசுந்தர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றபோது, தனிநபருக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தனிநபர் மற்றும் பெற்றோர் அதிகாரிகளை அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், தாங்கள் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பொக்லைன் எந்திரம் உதவியுடன் தடுப்பு சுவர் இடித்து அகற்றப்பட்டது. இதன்மூலம் விவசாயிகள் தடையின்றி விவசாய நிலத்துக்கு செல்ல முடியும் என்பதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அந்த வழியாக தங்கம்மன் கோவிலுக்கு சென்று வழிபடலாம் என்பதால் பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி சிவசுந்தரேசன் கூறுகையில், ‘பேட்டை முள்ளிக்குளம் பகுதியில் பிள்ளையன் கட்டளை, மேடை தளவாய் கட்டளை விவசாய நிலங்களுக்கு செல்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் அமைத்து இருந்தார். இதனால் சுமார் 80 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிப்படைந்தனர். தற்போது ஆக்கிரமிப்பு சுவரை அகற்றியதன் மூலம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு உள்ளது. மேலும் விவசாயிகள் தடையின்றி விவசாய பணிகள் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது’ என்றார்.
Related Tags :
Next Story