ஓவேலி வனவர், வனக்காப்பாளர் பணியிடை நீக்கம்
வனப்பகுதி ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இருந்ததாக ஓவேலி வனவர், வனக்காப்பாளர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
கூடலூர்
வனப்பகுதி ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இருந்ததாக ஓவேலி வனவர், வனக்காப்பாளர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
ஓவேலி வனச்சரகம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட ஓவேலி வனச்சரக பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காட்டெருமை வேட்டையாடப்பட்டு, அதன் இறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. பின்னர் முதுமலையில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, ஓவேலி அருகே சூண்டி பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
அப்போது வேட்டையாடப்பட்ட காட்டெருமையின் உடற்பாகங்களை புதைத்து வைத்திருப்பதை மோப்பநாய் கண்டுபிடித்தது. அவற்றை வனத்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் வேட்டை கும்பலுடன், வன ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டது.
பணியிடை நீக்கம்
இந்த நிலையில் வனப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை வன ஊழியர்கள் தடுக்க தவறியதும் உறுதி செய்யப்பட்டது. மேலும் வனவிலங்குகள் வேட்டையும் அதிகமாக நடைபெற்று இருந்தது.
இதையடுத்து கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம், துறை ரீதியாக விசாரணை நடத்தி வந்தார். தொடர்ந்து வனப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்க உடந்தையாக இருந்ததாகவும், வனவிலங்குகள் வேட்டையை தடுக்க தவறியதாகவும் ஓவேலி வனவர் சிவபிரகாசம், வனக்காப்பாளர் ராபர்ட் வில்சன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகல், சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தில் இன்னும் பலர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக வன அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story