இன்கோசர்வ் கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு ரூ.5 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு
நீலகிரி மாவட்டத்தில் உள்ள இன்கோசர்வ் கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு ரூ.5 கோடி சிறப்பு நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் உள்ள இன்கோசர்வ் கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு ரூ.5 கோடி சிறப்பு நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
கடும் நிதி நெருக்கடி
நீலகிரி மாவட்டத்தில் இன்கோசர்வ் மூலம் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் பல்வேறு காரணங்களால் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளின் இழப்பு ரூ.79.29 கோடி ஆகும். கடந்த ஆண்டு மட்டும் ரூ.19.52 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேயிலைத்தூள் ஒரு கிலோ ரூ.120 என்று இருந்த நிலையில், தற்போது ஒரு கிலோ ரூ.78 ஆக சரிந்து உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தேயிலை விவசாயிகளுக்கு அளித்த விலையில் உள்ள மாறுபாடுகள், வழக்கொழிந்த எந்திர பயன்பாடு, தரமற்ற தேயிலை கொள்முதல் உள்ளிட்ட காரணங்களுக்காக கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது.
ரூ.5 கோடி ஒதுக்கீடு
இதன் காரணமாக சிறு தேயிலை தோட்ட விவசாயிகளுக்கு இந்த தொழிற்சாலைகளால் பச்சை தேயிலைக்கான விலையை வழங்க முடியவில்லை. எனவே அதிக நிலுவைத்தொகை இருப்பதால் நீலகிரியில் உள்ள தேயிலை விவசாயிகள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது.
இந்தநிலையில் தமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் சிறப்பு மானிய நிதியாக தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டு உள்ளது. இந்த உத்தரவு சட்டமன்றத்தின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதால், தற்செயல் நிதியில் இருந்து முன்பணம் மூலமாக இந்த செலவு மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கடந்த சில மாதங்களாக நிலுவை வைத்திருந்த தொகை விரைவாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story