பல்வேறு வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்கள்


பல்வேறு வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்கள்
x
தினத்தந்தி 12 May 2022 8:15 PM IST (Updated: 12 May 2022 8:15 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் ரோஜா கண்காட்சி நாளை மறுநாள்(சனிக்கிழமை) தொடங்குகிறது. அங்கு பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன

ஊட்டி

ஊட்டியில் ரோஜா கண்காட்சி நாளை மறுநாள்(சனிக்கிழமை) தொடங்குகிறது. அங்கு பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.

ரோஜா பூங்கா

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள விஜயநகரம் பகுதியில் 4.40 ஹெக்டர் பரப்பளவில் ரோஜா பூங்கா அமைந்து உள்ளது. இங்கு மலைச்சரிவான பகுதி மற்றும் 5 அடுக்குகளில் 4 ஆயிரத்து 200 வகைகளை சேர்ந்த 32 ஆயிரம் ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே அதிகமான ரோஜா வகைகள் இருப்பது இந்த பூங்காவில்தான்.

தற்போது கோடை சீசனை முன்னிட்டு அங்குள்ள செடிகளில் ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இந்த நிலையில் ஊட்டியில் புகழ் பெற்ற ரோஜா கண்காட்சி நாளை மறுநாள்(சனிக்கிழமை) தொடங்குகிறது. இதற்காக பராமரிப்பு மற்றும் அழகுபடுத்துதல் உள்பட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 

செயற்கை நீர்வீழ்ச்சிகள்

சுற்றுலா பயணிகள் பூங்காவுக்குள் நுழைந்ததும் அவர்களை வரவேற்கும் வகையில் மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை என பல்வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. அங்கு அமைக்கப்பட்டு உள்ள 4 காட்சிமுனைகளில் நின்றபடி பூங்காவின் பல்வேறு பகுதிகளை கண்டு ரசிக்கலாம். சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து ஓய்வு எடுக்க நிழற்குடைகள், நிலா மாடம் ஆகியவை உள்ளன. கிணற்றை சுற்றி ஹெரிடேஜ் கார்டன் உள்ளது. 

அங்கு டேபிள் ரோஜாக்கள் பூத்துக்குலுங்குகிறது. 2 இடங்களில் செயற்கை நீர்வீழ்ச்சிகள் உள்ளதோடு, அலங்கார செடிகள் அழகாக காட்சி தரும் வகையில் வெட்டி விடப்பட்டு இருக்கிறது. இது சுற்றுலா பயணிகளை நிச்சயம் கவரும். அங்கு பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதோடு, தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து கொள்கிறார்கள். 

நுழைவு கட்டணம்

நிலா மாடம் அருகே மேரிகோல்டு மலர்களை கொண்டு பட்டாம்பூச்சி வடிவில் ‘செல்பி ஸ்பாட்' அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகள் செல்பி ஸ்பாட்டில் செல்பி எடுத்து மகிழ்கிறார்கள். ஊட்டி ரோஜா பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.25, கேமராவுக்கு ரூ.50, வீடியோ கேமராவுக்கு ரூ.100 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 

பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்த வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு பஸ் ரூ.100, மேக்சிகேப் ரூ.75, கார் மற்றும் ஜீப் ரூ.40, ஆட்டோ ரூ.20, இருசக்கர வாகனங்கள் ரூ.15 என வாகன நிறுத்த கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. ஊட்டி உருவாக்கி 200 ஆண்டுகள் ஆனதையொட்டி இந்த வருட ரோஜா கண்காட்சியில் ஏராளமான சிறப்பம்சங்கள் இடம்பெறும் என பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


Next Story