20 இடங்களில் தற்காலிக கழிப்பறைகள்


20 இடங்களில் தற்காலிக கழிப்பறைகள்
x
தினத்தந்தி 12 May 2022 8:15 PM IST (Updated: 12 May 2022 8:15 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் 20 இடங்களில் தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

ஊட்டி

ஊட்டியில் 20 இடங்களில் தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

கோடை சீசன்

மலை மாவட்டமான நீலகிரியில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இந்த சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். 

சமவெளி பகுதிகளில் அக்னி நட்சத்திரம் தொடங்கி வெயில் சுட்டெரிப்பதால், ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து கொண்டே செல்கிறது. இவர்கள் சொந்த வாகனங்கள் அல்லது வாடகை வாகனங்களில் வருகிறார்கள்.

கழிப்பறை வசதி இல்லை

இந்த வாகனங்களை நிறுத்த ஊட்டியில் ஏ.டி.சி. திடல், காந்தல், சேரிங்கிராசில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம்(என்.சி.எம்.எஸ்.) வளாகம் மற்றும் ஆவின் வளாகத்தில் கட்டணம் அடிப்படையில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 

தனியார் வாகன நிறுத்துமிடத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், அரசுக்கு சொந்தமான வாகனம் நிறுத்துமிடங்களில் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுகிறது. இதற்கிடையில் சுற்றுலா பயணிகளுக்கு போதிய கழிப்பறை வசதி இல்லாததால் மிகவும் அவதி அடைந்தனர். இதனால் சிலர் பொது இடங்களை கழிப்பறையாக பயன்படுத்தி வந்தனர். இதன் காரணமாக சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டு வந்தது.

20 இடங்களில்...

இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் எந்ததெந்த இடங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகிறார்கள் என்று கணக்கெடுத்து அந்த இடங்களில் தற்காலிக கழிப்பறைகள் அமைக்க திட்டமிட்டது. அதன்படி ஊட்டியில் ஏ.டி.சி. திடல், காந்தல் உள்பட முக்கிய இடங்களில் 20 தற்காலிக கழிப்பறைகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டு உள்ளன. 

இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஆனால் இந்த கழிப்பறைகளில் 24 மணிநேரம் தண்ணீர் வசதி இருப்பதில்லை என்றும், எப்போதும் தண்ணீர் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story