ஆரணி அருகே கவர்ச்சி திட்டங்கள் மூலம் ரூ.1¼ கோடி வசூல்


ஆரணி அருகே கவர்ச்சி திட்டங்கள் மூலம் ரூ.1¼ கோடி வசூல்
x
தினத்தந்தி 12 May 2022 9:35 PM IST (Updated: 12 May 2022 9:35 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் கவர்ச்சி திட்டங்கள் மூலம் தனியார் நிறுவனம் 3 நாட்களில் ரூ.1¼ கோடி வசூல் செய்துள்ளது. இதில் மோசடி நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

ஆரணி

ஆரணியில் கவர்ச்சி திட்டங்கள் மூலம் தனியார் நிறுவனம் 3 நாட்களில் ரூ.1¼ கோடி வசூல் செய்துள்ளது. இதில் மோசடி நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

கவர்ச்சி திட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் ஊராட்சியில் கடந்த 6-ந்தேதி ஒரு தனியார் கோல்டு கம்பெனி எனும் நிறுவனத்தின் கிளை தொடங்கப்பட்டுள்ளது. மேலாளராக அசோக்குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் செலுத்தினால் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் வீதம் 10 மாதத்தில் ரூ.3 லட்சமாக திரும்ப வந்துவிடும். 

மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் வீதம் 12 மாதத்தில் ரூ.3 லட்சம் முதலீடு திட்டத்தில் சேருபவர்களுக்கு தங்க காசுகள் வழங்கப்படுவதாக கவர்ச்சி திட்டங்களை கூறி பொது மக்களிடம் இருந்து பணம் பெற்று வருகின்றனர். இதனால் தினமும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. 

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கலெக்டர் பா.முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி, ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா ஆகியோருக்கு புகார் தெரிவித்துள்ளனர். 

அதன்பேரில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் உத்தரவின் பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், ஆரணி தாசில்தார் க.பெருமாள் ஆகியோர் தலைமையில், மண்டல துணை தாசில்தார் திருவேங்கடம், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி, கிராம நிர்வாக அலுவலர் சரவணன் ஒரு குழுவாகவும், ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் மற்றொரு குழுவும் தனித்தனியே சம்பந்தப்பட்ட கோல்டு கம்பெனி கிளை அலுவலக மேலாளர் அசோக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடவடிக்கை

விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறுகையில் சென்னை அமைந்தகரை பகுதியில் தலைமையிடமாக கொண்டு இந்த அலுவலகம் செயல்படுவதாகவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, மாங்கால் கூட்டுரோடு, ஆரணி சேவூர் கிளையுடன் 24 கிளைகள் செயல்பட்டு வருவதாகவும், தங்க நாணயம் விற்பனை செய்வது, வாங்குவது மட்டுமே என கட்டிட உரிமையாளரிடம் அனுமதி பெற்றுள்ள ஒப்பந்தத்தில் கூறப்பட்டதாக தெரிவித்தனர்.

இந்தநிலையில் கலெக்டர் பா.முருகேஷ் கூறுகையில் ஆரணியில் கவர்ச்சிகரமான திட்டத்தின் மூலம் பணம் மோசடி செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில் வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மோசடி நடப்பது கண்டறியப்பட்டால் வணிக குற்றப்பிரிவு போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

இந்த நிறுவனத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் 152 பேரிடம் ரூ.1 கோடியே 26 லட்சம் வசூல் ஆனதாக கூறப்படுகிறது.

Next Story