தவறான முகவரி கொடுத்து மத்திய அரசின் வீடு பெற்ற 4 பேரின் ஆணை ரத்து


தவறான முகவரி கொடுத்து மத்திய அரசின் வீடு பெற்ற 4 பேரின் ஆணை ரத்து
x
தினத்தந்தி 12 May 2022 9:42 PM IST (Updated: 12 May 2022 9:42 PM IST)
t-max-icont-min-icon

வானூர் ஒன்றியத்தில் தவறான முகவரி கொடுத்து மத்திய அரசின் வீடு கட்ட ஆணை பெற்ற 4 பேரின் ஆணையை ரத்து செய்ய கலெக்டர் மோகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பொன்னம்பூண்டி ஊராட்சியில் பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு கடந்த ஆண்டு 43 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வீடுகள் கட்டும் பணியை நடைபெற்று வருவதை ஆய்வு செய்ததில் 10 பயனாளிகள் 70 சதவீதத்திற்கு மேலும், 29 பயனாளிகள் 40 சதவீதத்திற்கு மேலும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

4 பேரின் வீடு கட்டும் ஆணை ரத்து

இதுதவிர 4 பேர், வெளியூரில் வசித்து வருகிற நிலையில் தவறான முகவரியை தந்து வீடு கட்டுவதற்கான ஆணை பெற்றிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆணையை உடனடியாக ரத்து செய்யும்படி மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.
மேலும் கோரக்கேணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிட பணிகள், பெரும்பாக்கம் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிட பணிகள் உள்ளிட்ட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், வானூர் தாசில்தார் பிரபுசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவாசகம் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story