விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் தடையை மீறி ஆட்டோ பந்தயம்
விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் தடையை மீறி ஆட்டோ பந்தயம் நடந்த சம்பவம் சமூகவலைதளங்களில் வீடியோவாக வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம்,
சென்னை புறநகர் பகுதிபல லட்சம் ரூபாய்க்கு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்தப்பட்டு வருகின்றன. சட்டவிரோதமாக நடைபெறும் இந்த பந்தயத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளதோடு முக்கிய சாலைகளில் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் போலீஸ் தடையை மீறி நேற்று காலை ஆட்டோ பந்தயம் நடந்துள்ளது. விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலையில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் மடப்பட்டு வரை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 18 கி.மீ. தூரத்திற்கு காலை 6 மணியளவில் சிலர் ஆட்டோ பந்தயம் நடத்தியுள்ளனர். இந்த ஆட்டோ பந்தயத்தில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை, வியாசர்பாடி பகுதியை சேர்ந்த 4 ஆட்டோக்களும், விழுப்புரத்தை சேர்ந்த ஒரு ஆட்டோவும் என மொத்தம் 5 ஆட்டோக்கள் கலந்துகொண்டன.
சமூகவலைதளங்களில் வீடியோ வைரல்
இந்த பந்தயத்தில் பங்கேற்ற 5 ஆட்டோக்களும் சீறிப்பாய்ந்து சென்றுள்ளன. அந்த ஆட்டோ டிரைவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வேறு சில ஆட்டோ டிரைவர்களும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இப்பந்தயத்தின் முடிவில் முதலிடம் பிடித்த சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ஆட்டோ பந்தயம் நடத்துவதற்கு அரசு தடை விதித்துள்ள நிலையில் தடையை மீறி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ பந்தயம் நடத்தியுள்ள சம்பவம் தற்போது சமூகவலைதளங்களில் வீடியோவாக வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து விழுப்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story