கால்வாயில் அடித்து செல்லப்பட்டு அக்காள்-தம்பி சாவு
பத்ராவதி அருகே கால்வாயில் அடித்து செல்லப்பட்டு அக்காள்-தம்பி பலியானார்கள்.
சிவமொக்கா:
கால்வாயில் மூழ்கி அக்காள்-தம்பி சாவு
சிவமொக்கா தாலுகா முதுவாலா கிராமத்தில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு சந்தனா(வயது 14) என்ற மகளும், ஹர்ஷா(10) என்ற மகனும் இருந்தனர். இந்த நிலையில் கோடை விடுமுறைக்காக அக்காள்-தம்பி 2 பேரும் பத்ராவதி தாலுகா ஒலேஒன்னூர் அருகே உள்ள அகரதஹள்ளியில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மதியம் தனது பெரியப்பாவுடன் 2 பேரும் அருகே உள்ள பத்ரா கால்வாயில் குளிக்க சென்றுள்ளனர். பத்ரா கால்வாயில் குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சந்தனாவும், அவளது தம்பி ஹர்ஷாவும் கால்வாய் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பெரியப்பா, 2 பேரையும் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அவரால் காப்பாற்ற முடியவில்லை.
சோகம்
இதனால் 2 பேரும் கால்வாயில் அடித்து செல்லப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பத்ராவதி போலீசார், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 2 பேரை மீட்க முயன்றனர். ஆனால் அவர்கள் 2 பேரும் கிடைக்கவில்லை. நேற்று மாலை வரை தேடியும் 2 பேரின் உடல்களும் கிடைக்கவில்லை.
இதனால் 2 பேரும் கால்வாயில் மூழ்கி இறந்துவிட்டதாக போலீசார் கூறுகின்றனர். தொடர்ந்து 2 பேரின் உடல்களும் தேடும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து பத்ராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story