கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்ட நிதி உதவி


கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்ட நிதி உதவி
x
தினத்தந்தி 13 May 2022 12:00 AM IST (Updated: 12 May 2022 10:09 PM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்ட நிதி உதவி வழங்கப்படும் என தொழிலாளர் நலவாரியம் அறிவித்துள்ளது.

வெளிப்பாளையம்:
நாகை மாவட்டத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்ட நிதி உதவி வழங்கப்படும் என ெதாழிலாளர் நலவாரியம் அறிவித்துள்ளது.
வீடு கட்ட ரூ.4 லட்சம் நிதி உதவி
நாகை மாவட்டத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு சொந்தமாக வீடு  கட்ட நிதி உதவி வழங்கப்பட உள்ளது. அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே  கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதி உதவி வழங்கப்படும் என்று நாகை மாவட்ட தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் அறிவித்துள்ளது.
 இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்ட ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.இந்த திட்டத்தில் பயனாளிகள் உதவித்தொகை பெற, சொந்தமான வீடு கட்டுதல் அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெறுதல் ஆகிய ஏதாவது ஒரு முறையை தன் விருப்பத்தின் பேரில் தேர்வு செய்யலாம்.
ஆண்டு வருமானம்
 பயனாளி தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் நாள் அன்று புதுப்பித்தல் நடப்பில் இருக்க வேண்டும். பயனாளி அல்லது அவரது குடும்பத்தினருக்கு வேறெங்கும் கான்கிரீட் வீடு எதுவும் சொந்தமான இருக்க கூடாது. அரசின் வேறு வீட்டு வசதி திட்டத்தில் பயனடைந்து இருக்க கூடாது. பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும். 
சொந்தமான வீடு கட்ட விரும்புபவர் என்றால், குறைந்தபட்சம் 28 சதுர மீட்டர் அல்லது 300 சதுர அடிமனை சொந்தமான இருக்க வேண்டும். பயனாளியின் பெயரில் பட்டா அல்லது தொழிலாளி பெயருடன் குடும்ப உறுப்பினர் பெயரும் இடம் பெற்ற சொந்த கூட்டு பட்டா இருக்க வேண்டும்.
நலவாரிய அடையாள அட்டை
 தொழிலாளர்கள் உதவி தொகை கேட்கும் விண்ணப்பத்துடன், தொழிலாளியின் நல வாரிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பட்டா, வங்கிக் கணக்கு, கிராம நிர்வாக அலுவலர் அல்லது வருவாய் ஆய்வாளரால் வழங்கப்பட்ட வருமான சான்றிதழ் மற்றும் சமீபத்தில் எடுக்கப்பட்ட தொழிலாளியின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை அசலாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
 வீட்டு வசதி திட்டத்தின்கீழ் அளிக்கப்படும் விண்ணப்பங்கள், மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையரால் சரிபார்க்கப்பட்டு நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டு வசதி திட்டத்திற்கான விண்ணப்பத்தை www.tnuwwb.tn.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தகவலை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.  

Next Story