அதிக பாரம் ஏற்றி வந்த 14 லாரிகள் பறிமுதல்


அதிக பாரம் ஏற்றி வந்த 14 லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 May 2022 10:15 PM IST (Updated: 12 May 2022 10:15 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் பகுதிகளில் போலீசார் விடிய விடிய நடத்திய சோதனையில் அதிக பாரம் ஏற்றி வந்த 14 லாரிகளை பறிமுதல் செய்து ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர்.

குழித்துறை:
மார்த்தாண்டம் பகுதிகளில் போலீசார் விடிய விடிய நடத்திய சோதனையில் அதிக பாரம் ஏற்றி வந்த 14 லாரிகளை பறிமுதல் செய்து ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர்.
விடிய விடிய சோதனை
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும், குமரி மாவட்டத்தில் இருந்தும் அதிகளவில் லாரிகளில் எம்.சான்ட், கற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. லாரிகளில் ஏற்ற அனுமதித்ததை விட கனிமவளங்கள் அதிக அளவில் ஏற்றப்பட்டு இரவு நேரங்களில் கொண்டு செல்லப்படுகின்றன.
இதனால், மார்த்தாண்டம் பகுதிகளில் அடிக்கடி விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. அனுமதி இல்லாமல் கனிம வளங்களை கடத்துவதையும், வாகங்களில் அதிக பாரம் ஏற்றி செல்வதையும் தடுக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். 
14 லாரிகள் பறிமுதல்
அதன்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா, தக்கலை துணை சூப்பிரண்டு கணேசன் ஆகியோர் தலைமையில் மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல் மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி வந்த 14 லாரிகளை பறிமுதல் செய்தனர். அந்த லாரிகளுக்கு மொத்தம் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடுமையான நடவடிக்கை
இந்த அதிரடி சோதனை குறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு  விவேகானந்த சுக்லா, தக்கலை துணை போலீஸ் சூப்பிண்ரண்டு கணேசன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
விடிய, விடிய மார்த்தாண்டம், தக்கலை, குலசேகரம், களியக்காவிளை பகுதிகளில் கண்காணிப்பு          பணியில் ஈடுபட்டோம்.    அப்போது, 20 லாரியை சோதனை செய்ததில் 14 லாரிகள் அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை ஏற்றி வந்தது தெரிந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து லாரிகளுக்கு தலா ரூ.7 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை அபராதம் என மொத்தம் ரூ.2 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது. 
லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படும் போது உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனுமதி பெற்று உரிய அளவுடன் கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் எந்த நேரத்திலும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லாமல் அனுமதிக்கு மேல் அதிக பாரத்துடன் செல்லும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், போலீசாரின் இதுபோன்ற அதிரடி சோதனை தினமும் இரவு பகல் என எல்லா  நேரத்திலும் நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story