ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதி பழக்கடைக்காரர் பலி
நாகையில் பள்ளியில் இருந்து மகளை அழைக்கச் சென்ற போது ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதி பழக்கடைக்காரர் பலியானார்.
வெளிப்பாளையம்:
நாகையில் பள்ளியில் இருந்து மகளை அழைக்கச் சென்றபோது ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதி பழக்கடைக்காரர் பலியானார்.
அரசு பஸ் மோதியது
நாகையை அடுத்த பொரவாச்சேரி சிவசக்தி நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 42). இவர், நாகை பழைய பஸ் நிலையத்தில் பழக்கடை நடத்தி வந்தார். நேற்று மாலை, நாகையில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் தனது மகளை அழைத்து செல்வதற்காக பொரவாச்சேரியில் இருந்து ஸ்கூட்டரில் நாகைக்கு சென்று கொண்டிருந்தார். நாகை வ.உ.சி.தெரு அருகே சென்ற போது பின்னால் மதுரையில் இருந்து நாகைக்கு வந்து கொண்டிருந்த அரசு பஸ், ஸ்கூட்டர் மீது மோதியது.
பழக்கடைக்காரர் சாவு
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பழக்கடைக்காரர் கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியில் இருந்து மகளை அழைக்க சென்ற தந்தை பஸ் மோதி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story