இலங்கை சிறையில் இருந்து கைதிகள் தப்பியதால், கர்நாடகத்தின் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்
இலங்கை சிறையில் இருந்து கைதிகள் தப்பியதால், கர்நாடகத்தின் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
மங்களூரு:
இலங்கை சிறையில் இருந்து கைதிகள் தப்பியதால், கர்நாடகத்தின் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
இலங்கை கலவரம்
இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக இலங்கை மக்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். அவர்களின் போராட்டத்திற்கு அடிப்பணிந்து பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். இதனால் ஆத்திரம் அடைந்த மகிந்த ராஜபக்சேயின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் இலங்கை முழுவதும் கலவரம் வெடித்தது.
இந்த கலவரத்தை பயன்படுத்தி இலங்கை சிறையில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் தப்பித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து தப்பித்த சிறை கைதிகள், அகதிகள் என கூறி இந்தியாவிற்குள் நுழைந்துவிட கூடாது என்று இந்திய கடலோர பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாநகர கமிஷனர் பேட்டி
இந்த நிலையில் கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களுள் ஒன்றான மங்களூரு வழியாக இலங்கையில் இருந்து தப்பித்து வருவோரை கண்காணிக்க கடலோர காவல்படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து மங்களூரு மாவட்ட போலீஸ் கமிஷனர் சசிகுமார் நிருபர்களுக்கு பேட்டியின் போது கூறியதாவது:-
இலங்கையில் ஏற்பட்டுள்ள கலவரத்தை பயன்படுத்தி இலங்கை சிறையில் இருந்து தப்பித்த கைதிகள் இந்தியாவிற்குள் நுழைந்துவிடாமல் தடுக்க கடலோர எல்லைப்பகுதிகளை மத்திய உளவுத்துறை, கண்காணிக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன் பேரில் தமிழக கடல்பகுதிகளில் ரோந்து கப்பல்கள் மூலம் காவல் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கைதிகள் மற்றும் அகதிகள் கர்நாடக கடலோர பகுதிகள் வழியாக நாட்டின் எல்லைக்குள் ஊடுருவி விடுவார்கள் என்ற அச்சம் காரணமாக மங்களூரு கடல் பகுதிகளில் கடலோர காவல் படையினர், கப்பல்கள் மூலம் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் கர்நாடகத்தில் உடுப்பி, உத்தர கன்னடா கடலோர பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கேரள படகுகள் மங்களூருவுக்கு வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story