உலக செவிலியர் தின கொண்டாட்டம்
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.
பெரம்பலூர்,
மக்கள் நல்வாழ்வுக்காக இரவு, பகல், பண்டிகை நாட்கள் பாராமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை புரிந்து வரும் செவிலியர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. இங்கிலாந்தில் செல்வ குடும்பத்தில் பிறந்து வளர்ந்து செவிலியராக சேவையாற்றி மறைந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த நாளான மே 12-ந்தேதி ஆண்டுதோறும் உலக செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் செவிலியர்களால் நேற்று கொண்டாடப்பட்டது.
முன்னதாக பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதற்கு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார். இருக்கை மருத்துவ அலுவலர் கலா முன்னிலை வகித்தார். பின்னர் செவிலியர்கள் கேக் வெட்டி உலக செவிலியர் தினத்தை கொண்டாடினர். பின்னர் மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள், ஊழியர்கள், பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு செவிலியர்கள் இனிப்பு கொடுத்தனர். அவர்கள் செவிலியர் தின வாழ்த்துக்களை கூறினர். மேலும் செவிலியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.
Related Tags :
Next Story