அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.47 லட்சம் மோசடி


அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.47 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 13 May 2022 12:40 AM IST (Updated: 13 May 2022 12:40 AM IST)
t-max-icont-min-icon

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.47 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

மதுரை, 
அரசியல் பிரபலங்கள் பெயரை பயன்படுத்தி, அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.47 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- 
்மதுரை தம்பதி
மதுரை விஸ்வநாதபுரம் சென்ட்ரல் பேங்க் காலனியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவர் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். 
இவர் தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-
கடந்த ஆண்டு எனக்கு ஆனையூர் மலர்நகரை சேர்ந்த ஸ்ரீபுகழ்இந்திரா என்பவர், தனது பல்வேறு நிறுவனத்தின் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும் என்று அறிமுகம் ஆனார். 
அப்போது அவர், முன்னாள் முதல்-அமைச்சரின் மகனுடன் இணைந்து ஒரு நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் நாங்கள் இருவரும் தொழில் முறை கூட்டாளிகள் என்றும் கூறி சில ஆவணங்களை காட்டினார். மேலும் அரசியல் பிரபலங்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களையும் காண்பித்தார். பின்னர் ஸ்ரீபுகழ் இந்திராவும், அவரது மனைவி ரேணுகாவும் எனது குடும்ப உறுப்பினர்களுடன் நன்கு பழகி வந்தனர்.
அரசு வேலை 
இந்த நிலையில் சிலருக்கு அரசு வேலை வாங்கி தந்திருப்பததாக கூறி பணி நியமன ஆணைகளையும் காண்பித்துள்ளனர். பின்னர் எனது மகளுக்கும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறினர். அவர்களை நம்பி நான் பல தவணைகளில் ரூ.47 லட்சத்து 26 ஆயிரம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் அ.தி.மு.க. ஆட்சி முடிந்ததால் வேலை வாங்கி கொடுப்பதில் சிரமம் உள்ளதாக தெரிவித்தனர்.
தி.மு.க. அமைச்சர்கள் பலரையும் தங்களுக்கு தெரியும் என்று கூறி, அவர்களுடன் சேர்ந்து எடுத்து கொண்டதாக சில புகைப்படத்தையும் காண்பித்துள்ளனர். 
அதே நேரத்தில் மேலும் ரூ.10 லட்சம் கொடுத்தால் அரசு சிமெண்டு கம்பெனியில் எனது அக்காள் மகனுக்கு மேலாளர் வேலை வாங்கி தருவதாகவும் தெரிவித்தனர். உடனே நான் கொடுத்த பணத்தில் அதில் கழித்து கொள்ளுமாறு கூறினர்.
இதற்கிடையில் சென்னையில் இருந்து முதல்-அமைச்சரின் தனி செயலாளர் பேசுவதாக ஒரு பெண் என்னிடம் பேசினார். சிமெண்டு கம்பெனியில் வேலை உறுதியாகி விட்டதாகவும், உடனே ஸ்ரீபுகழ்இந்திராவை சந்தித்து பேசி கொள்ளுங்கள் என்றும் அவர் கூறினார். நான் அவர் பேசிய நம்பரை வைத்து விசாரித்த போது அது மோசடி என்பதும், அந்த நம்பரில் பேசியவர் ஸ்ரீபுகழ்இந்திராவின் மகள் என்பதும் தெரியவந்தது.
 கைது
அதை தொடர்ந்து, நான்் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன். நான் கொடுத்த பணத்தை அவர்களிடம் திரும்ப கேட்டேன். ஆனால் அவர்கள் பணத்தை தரமறுத்து, எனது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்தனர். எனவே இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். 
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அரசியல் பிரபலங்கள் பெயரை பயன்படுத்தி, அரசு வேலை வாங்கி தருவதாக ஸ்ரீபுகழ்இந்திராவும், அவரது மனைவியும் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் நேற்று கைது செய்தனர்.

Next Story