சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோவிலில் உண்டியல் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் உண்டியல் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. பணியாளர் உடனே கவனித்ததால் ரூ.2½ லட்சம் தப்பியது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் உண்டியல் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. பணியாளர் உடனே கவனித்ததால் ரூ.2½ லட்சம் தப்பியது.
சேவுகப்பெருமாள் கோவில்
சிங்கம்புணரியில் பிரசித்திபெற்ற சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் சுற்றுப்புற 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குலதெய்வமாக விளங்குகிறது. இந்த கோவிலில் சேவுகப்பெருமாள் அய்யனார், பூரண புஷ்கலை தேவியருடன் அருள்பாலித்து வருகிறார்.
இந்த கோவிலில் அடுத்த (ஜூன்) மாதம் 6-ந்தேதி முதல் 14-ந் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி
இந்த மாத இறுதியில் கோவிலில் உள்ள சிவகங்கை தேவஸ்தானத்துக்கு சொந்தமான 5 உண்டியல்கள் திறந்து பணம் கணக்கிட தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் கோவில் பணியாளர் செல்வம் என்பவர் கோவில் மூலவர் முன்பு உள்ள பெரிய உண்டியல் அருகில் சுத்தம் செய்தார். அப்போது உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக தேவஸ்தான அதிகாரிகளும் கோவில் கண்காணிப்பாளர், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தேவஸ்தான கண்காணிப்பாளர் தன்னாயிரம் மற்றும் கணக்கர் கலைச்செல்வம், சிங்கம்புணரி சப்-இன்ஸ்பெக்டர் குகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் உண்டியல் பூட்டை உடைத்து கொள்ளை நடப்பதற்கான முயற்சி நடந்ததை அறிந்தனர்.
ரூ.2½ லட்சம் தப்பியது
இதை தொடர்ந்து நேற்று உண்டியல் திறந்து காணிக்கை பணம் என்னும் பணி தொடங்கியது. இதில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ தலைமையில் ஆய்வாளர் சுகன்யா, சிங்கம்புணரி பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலம் முத்து முன்னிலையில் உண்டியல் பணம் எண்ணும் பணி தொடங்கியது. இதில் 2 லட்சத்து 69 ஆயிரத்து 886 ரூபாய் இருந்தது. உடனே பணியாளர் கவனித்து உண்டியல் பணம் எண்ணப்பட்டதால் ரூ.2½ லட்சம் தப்பியது.
கோவிலில் திருப்பணிகள் நடந்ததால் கண்காணிப்பு கேமரா கழட்டி வைக்கப்பட்டு இருந்தது. அதனால் பக்தர்கள் போல கொள்ளையர்கள் நடித்து உண்டியல் பூட்டை உடைத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story