பட்டுக்கோட்டை புறவழிச்சாலை முழுமை பெறுமா?


பட்டுக்கோட்டை புறவழிச்சாலை முழுமை பெறுமா?
x
தினத்தந்தி 13 May 2022 1:22 AM IST (Updated: 13 May 2022 1:22 AM IST)
t-max-icont-min-icon

10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள பட்டுக்கோட்டை புறவழிச்சாலையை முழுமையாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டுக்கோட்டை:
10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள பட்டுக்கோட்டை புறவழிச்சாலையை  முழுமையாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பட்டுக்கோட்ைட நகரம்
தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை நகரம் தேர்வு நிலை நகராட்சி ஆகும். தாலுகா தலைநகராகவும், பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகாக்களை உள்ளடக்கிய கோட்ட தலைநகராகவும் பட்டுக்கோட்டை நகரம் உள்ளது. தமிழகத்தின் வட மாவட்டங்களையும், தென் மாவட்டங்களையும் இணைக்கும் மத்திய நகரமாகவும் விளங்கி வருகிறது. 
வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, தம்பிக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி பகுதியில் உற்பத்தியாகும் உப்பு, தேங்காய், மீன், கருவாடு மற்றும் காய்கறிகள் பட்டுக்கோட்டை வழியாக தான் லாரிகள் மூலமாக வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. வடமாநிலங்களிலிருந்து ஜவுளிகள், கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் இந்த பகுதிக்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. 
புறவழிச்சாலை அமைக்க முடிவு
இதன் முக்கியத்துவத்தை கருதியும், வியாபாரிகளின் கோரிக்கைகளையும் ஏற்று நகருக்குள் சரக்கு லாரிகள் வராமல் சுற்றுச்சாலை வழியாக பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த ஊர்களுக்கு கொண்டு செல்லும் வழியில் பட்டுக்கோட்டை நகருக்கு வெளியே புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் புறவழிச்சாலை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. 
முதல் கட்டமாக முத்துப்பேட்டை சாலையில் அணைக்காடு கிராமத்திலிருந்து தஞ்சை சாலையை இணைக்கும் வகையில் ரூ.32 கோடி செலவில் 8 கிலோமீட்டர் தூரம் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. 
முழுமையாக முடிக்க வேண்டும்
தஞ்சை சாலையிலிருந்து அறந்தாங்கி சாலை, சேதுபாவாசத்திரம் சாலை, அதிராம்பட்டினம் சாலை வழியாக அணைக்காடு சாலையில் இணைக்கும் இந்த புறவழிச்சாலை கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு்ள்ளது. எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள பட்டுக்கோட்டை புறவழிச்சாலையை முழுமையாக முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story