பெங்களூருவில் பெய்த கனமழைக்கு 400 ஆண்டுகள் பழமையான ராட்சத ஆலமரத்தின் ஒரு பகுதி சாய்ந்தது


பெங்களூருவில் பெய்த கனமழைக்கு 400 ஆண்டுகள் பழமையான ராட்சத ஆலமரத்தின் ஒரு பகுதி சாய்ந்தது
x
தினத்தந்தி 13 May 2022 2:58 AM IST (Updated: 13 May 2022 2:58 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு 400 ஆண்டுகள் பழமையான ராட்சத ஆலமரத்தன் ஒரு பகுதி வேரோடு சாய்ந்து உள்ளது.

பெங்களூரு:

400 ஆண்டு பழமையான ஆலமரம்

  பெங்களூருவில் கடந்த சில தினங்களாக மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரில் உள்ள பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்து வருகிறது. இந்த நிலையில் கனமழைக்கு 400 ஆண்டுகள் பழமையான ஆலமரம் வேரோடு சாய்ந்து விழுந்த சம்பவம் நடந்து உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

  பெங்களூரு மைசூரு ரோடு கெங்கேரி அருகே கேத்தோஹள்ளி பகுதியில் தாவரவியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் 400 ஆண்டுகள் பழமையான ராட்சத ஆலமரம் (தொட்டத ஆலதமரம்) ஒன்று இருந்தது. அந்த ஆலமரம் 3 ஏக்கர் நிலப்பரப்பில் பல்வேறு பகுதிகளாக விரிந்து காணப்படுகிறது. இந்த ஆலமரம் அமைந்துள்ள பகுதி சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு தினமும் அங்கு ஏராளமானோர் வந்து
செல்கிறார்கள்.

ஒரு பகுதி சாய்ந்தது

  இந்த நிலையில் கனமழை காரணமாக அந்த ஆலமரத்தின் ஒரு பகுதி வேரோடு சாய்ந்து விழுந்தது. இதுபற்றி அறிந்ததும் கேத்தோஹள்ளி பகுதி மக்கள், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று சாய்ந்து கிடந்த மரத்தை பார்வையிட்டனர். பின்னர் அந்த மரத்தை அங்கிருந்து வெட்டி அகற்றும் பணி நடந்தது.

  இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரியான கேசவமூர்த்தி என்பவர் கூறும்போது, கேத்தோஹள்ளி பகுதியில் 400 ஆண்டுகள் பழமையான ராட்சத ஆலமரத்தின் ஒரு பகுதி விழுந்து உள்ளது. இரவில் மரம் விழுந்ததால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. மரம் விழுந்ததால் பூங்காவில் கட்டமைப்பில் சில சேதம் ஏற்பட்டு உள்ளது. அதை சரிசெய்யும் பணிகள் விரைவில் தொடங்கும் என்றார்.

  கடந்த 2000-ம் ஆண்டே நோய் தொற்று காரணமாக ஆலமரத்தின் ஒரு பகுதி சற்று வலுவிழந்து காணப்பட்டது. இந்த மரத்தை பேணி பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று காலை வரை பெங்களூருவில் சாரல் மழை பெய்தது. இதனால் நேற்று காலை சூரியனே காண முடியாத நிலை உண்டானது.

Next Story