‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பூங்கா சீரமைக்கப்படுமா?
கோபி நகரின் மத்திய பகுதியில் வாஸ்து நகர் உள்ளது. அங்கு கோபி நகராட்சி சார்பில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் வந்து ஊஞ்சல்களில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் பெரியவர்கள் தினமும் அந்த பூங்காவில் நடைபயிற்சியும் மேற்கொண்டு வந்தனர். ஆனால் தற்போது அந்த பூங்காவில் செடி, கொடிகள் அதிகமாக வளர்ந்து உள்ளது. இதனால் சிறியவர்கள் விளையாட முடியாமலும், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமலும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த பூங்காவில் வளர்ந்து உள்ள செடி, கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தி சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
பொதுமக்கள், கோபி.
தெருவிளக்குகள் ஒளிர வேண்டும்
சத்தியமங்கலம் திருநகர் காலனி பகுதியில் கடந்த 5 நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் பெண்கள், குழந்தைகள் ரோட்டில் நடமாட அச்சப்படுகிறார்கள். எனவே தெருவிளக்குகளை சீரமைத்து எரிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சத்தியமங்கலம்.
நிழற்குடை தேவை
அந்தியூர் அருகே உள்ள மாத்தூரில் அரசு மாதிரி பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ- மாணவிகள் பெருமாள் கோவில் பிரிவு பகுதியில் இருந்து பஸ்களில் ஏறி செல்கிறார்கள். ஆனால் மாணவ- மாணவிகள் நிற்பதற்கு வசதியாக நிழற்குடை இல்லை. எனவே அந்த பகுதியில் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மாத்தூர்.
ஆபத்தான பள்ளம்
ஈரோட்டில் அகில்மேடு 7-வது வீதியில் மிகப்பெரிய பள்ளம் ஒன்று உள்ளது. இந்த வழியாகத்தான் ஈரோடு பஸ் நிலையத்துக்கு பஸ்கள் வருகின்றன. மேலும் இந்த வீதி வழியாக ஏராளமான வாகனங்களும் சென்று வருகின்றன. இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் வாகனங்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றன. குறிப்பாக வளைவில் இந்த பள்ளம் இருப்பதால் வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை திருப்பும்போது மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே ஏதேனும் பெரிய விபத்து ஏற்படும் முன் பள்ளத்தை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.
தூர்வாரப்படுமா?
ஈரோடு சம்பத் நகர் நால்ரோடு பகுதியில் இருந்து பெரியவலசு செல்லும் பகுதியில் சாக்கடை கால்வாய் பல மாதங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் அந்த பகுதியில் டாஸ்மாக் கடை செயல்படுவதால் அங்கு மதுவாங்கும் மது பிரியர்கள் மதுவை குடித்து விட்டு பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சாக்கடையில் வீசி செல்கின்றனர். இதன் காரணமாக தண்ணீர் செல்லமுடியாமல் சாக்கடை கால்வாயில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை உடனடியாக சுத்தம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனிஷா, ஈரோடு.
வேகத்தடை வேண்டும்
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. பெருந்துறை ரோடு மற்றும் மீனாட்சி சுந்தரனார் ரோட்டில் இருந்து மேம்பாலம் வழியாக ஈ.வி.என்.ரோட்டிற்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. மேம்பாலம் முடியும் இடத்தில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் பாவாடை வீதி மற்றும் கலைமகள் ரோட்டில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் ஈ.வி.என். ரோட்டை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே ஈ.வி.என். ரோட்டில் மேம்பாலம் முடியும் இடத்தில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசுகி, ஈரோடு.
Related Tags :
Next Story