கூடுதல் விலைக்கு மது விற்பனை: டாஸ்மாக் ஊழியர்கள் 15 பேர் இடமாற்றம் அதிகாரிகள் நடவடிக்கை
கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் ஊழியர்கள் 15 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சேலம்,
கூடுதல் விலைக்கு மது விற்பனை
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 217 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதாக டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது மதுப்பிரியர்கள் புகார் கூறி வந்தனர். கூடுதல் விலை தொடர்பாக மதுப்பிரியர்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் இடையே அவ்வப்போது கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து மாவட்ட மேலாளர் ராஜா தலைமையில் அதிகாரிகள் கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
15 பேர் இடமாற்றம்
இந்த ஆய்வில் சில கடைகளில் மதுப்பிரியர்களிடம் டாஸ்மாக் விற்பனையாளர்கள் கூடுதலாக ரூ.10 முதல் ரூ.20 வரையிலும் வசூலித்தது தெரியவந்தது. இதையடுத்து புகாருக்கு ஆளான சம்பந்தப்பட்ட டாஸ்மாக் விற்பனையாளர்கள் பட்டியலை அதிகாரிகள் தயாரித்தனர்.
இதில் புகாருக்கு ஆளான ஒரு மேற்பார்வையாளர், 14 விற்பனையாளர்கள் என மொத்தம் 15 டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று அதிரடியாக வேறு கடைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ராஜா தெரிவித்தார்.
Related Tags :
Next Story