சாலையோரம் கடைகள் அமைக்க எதிர்ப்பு: சேலம் கோட்டையில் பொதுமக்கள் சாலைமறியல்
சேலம் கோட்டை பகுதியில் சாலையோரம் கடைகள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம்,
சாலை மறியல்
சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் 31-வது வார்டு ஹபீப் தெருவில் சாலையோரம் பழைய புத்தகக்கடை, குல்லா மற்றும் ஸ்வெட்டர் விற்பனை கடைகள் செயல்பட்டு வந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை அமைப்பதற்காக அந்த கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. அதன்பிறகு 2 வாரங்களுக்கு முன்பு அங்கு தார்சாலை அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் அப்பகுதியில் ஏற்கனவே கடைகள் வைத்திருந்தவர்கள் நேற்று காலை மீண்டும் கடைகள் அமைத்து கொண்டிருந்தனர். இதற்கு அந்த பகுதியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்கள் கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதுவரை கடைகள் அமைக்க வேண்டாம் என வியாபாரிகளிடம் போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இது குறித்து கோட்டை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், சாலையோரம் இருபுறங்களிலும் கடைகள் இருந்தால் பொதுமக்கள் சென்று வருவதற்கு இடையூறாக உள்ளது. அருகில் அரசு மகளிர் பள்ளி இருப்பதால் மாணவிகளை அழைத்து செல்ல ஆட்டோக்கள் அதிகளவில் நிறுத்தப்படுவதால் அங்கு கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே இந்த பகுதியில் கடைகள் அமைக்கக்கூடாது என்றனர்.
பொதுமக்களின் இந்த மறியல் போராட்டத்தால் சேலம் கோட்டையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story