பழைய பாஸ்போர்ட் அலுவலக கட்டிடம் இடிப்பு


பழைய பாஸ்போர்ட் அலுவலக கட்டிடம் இடிப்பு
x
தினத்தந்தி 13 May 2022 12:15 AM GMT (Updated: 2022-05-13T05:45:03+05:30)

பழைய பாஸ்போர்ட் அலுவலக கட்டிடம் இடிக்கப்பட்டது.

திருச்சி:

பழமையான கட்டிடம் இடிப்பு
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே சத்திரம் செல்லும் வழியிலான மேலரண் சாலையில், மாநகராட்சி சார்பில் 1983-ம் ஆண்டில் சுமார் 15 ஆயிரம் சதுர அடியில் 2 மாடிகள் கொண்ட வணிக வளாகம், பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு இயங்கி வந்தது. அந்த கட்டிடம் பழுதான காரணத்தால் அங்கு இயங்கி வந்த பாஸ்போர்ட் அலுவலகம், சேவை மைய அலுவலகம் மற்றும் வணிக நிறுவனங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து 37 ஆண்டுகள் பழமையான அந்த கட்டிடத்தை பொக்லைன் எந்திரத்தால் இடிக்கும் பணி நடந்து வருகிறது. உயரமான கட்டிடத்தில், பல்வேறு இடங்களில் மலைத்தேனீக்கள் கூடு கட்டியிருந்தன. கட்டிடத்தை இடிக்க இடையூறாக இருந்த தேன்கூடுகளை அகற்றிவிட்டு, கட்டிடத்தை இடிக்கும் பணி நேற்று நடந்தது.
ரூ.9 கோடியில் வணிக வளாகம்
பழைய கட்டிடத்தை முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கி அகற்றிய பின்னர், அங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.9 கோடியில் புதிய வணிக வளாகம் மற்றும் ரூ.7 கோடி மதிப்பில் 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி கட்டப்பட உள்ளதாகவும், ஓராண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அங்கிருந்த குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்ட 5 வார்டு பகுதிகளுக்கும், கம்பரசம்பேட்டை குடிநீரேற்று நிலையம் மூலம் வரும் குழாய்களில் இருந்து நேரடியாக குடிநீர் வினியோக்கப்படுகிறது.

Next Story