நவீன எடைமேடை பயன்பாட்டுக்கு வருவது எப்போது


நவீன எடைமேடை  பயன்பாட்டுக்கு வருவது எப்போது
x
தினத்தந்தி 13 May 2022 4:42 PM IST (Updated: 13 May 2022 4:42 PM IST)
t-max-icont-min-icon

நவீன எடைமேடை பயன்பாட்டுக்கு வருவது எப்போது

போடிப்பட்டி
உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன எடைமேடையை விரைவில் பயன்பாட்டுக்குக்கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
பொருளீட்டுக் கடன்
உடுமலை சுற்றுவட்டார கிராமங்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இதில் பல கிராமங்களில் அறுவடை செய்த விளை பொருட்களை உலர வைக்கவும், இருப்பு வைக்கவும் போதிய வசதிகள் இல்லாத நிலை உள்ளது. அத்துடன் விளைபொருட்களை உரிய விலைக்கு விற்பனை செய்வதற்கும் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். இந்த நிலையில் உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள உலர் களங்களில் விளைபொருட்களை காய வைக்கவும், கிடங்குகளில் இருப்பு வைக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு பொருளீட்டுக்கடனும் வழங்கப்படுகிறது. மேலும் சரியான விலைக்கு விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு உதவும் வகையில் தேசிய வேளாண் சந்தை திட்டமும் இங்கு செயல்படுகிறது. இத்தனை வசதிகள் இருந்தும் விவசாயிகள் விற்பனை செய்யும் பொருட்களை மொத்தமாக எடை போடுவதற்கு தனியார் எடை மேடைகளுக்கு செல்ல வேண்டிய நிலையே இருந்து வந்தது.
நவீன எடை மேடை
தற்போது ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 60 டன் வரை எடை போடக்கூடிய நவீன எடை மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பது விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. 
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு விளைபொருட்களைக் கொண்டு வரும் விவசாயிகள் மட்டுமல்லாமல் அனைவரும் பயன்படுத்தும் வகையிலேயே இந்த எடை மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த எடை மேடைக்கு வரும் வாகனங்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் பாதை அமைக்க வேண்டி உள்ளது. அதற்காக சில மரங்களை அகற்ற வேண்டிய நிலை குறித்து நெடுஞ்சாலைத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த நவீன எடை மேடை பயன்பாட்டுக்குக்கொண்டு வரப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Next Story