கம்பிவடம் மாற்றும் பணிகள் நிறைவு பழனியில் 3-வது மின்இழுவை ரெயில் சேவை தொடக்கம்
கம்பிவடம் மாற்றும் பணிகள் நிறைவடைந்ததையொட்டி பழனியில் 3-வது மின்இழுவை ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
பழனி:
பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை, யானைப்பாதை பிரதானமாக உள்ளது. இதைத்தவிர மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் செல்வதற்காக மின்இழுவை ரெயில், ரோப்கார் சேவையும் உள்ளது. மேற்கு கிரிவீதியில் உள்ள மின்இழுவை ரெயில்நிலையத்தில் இருந்து 3 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பராமரிப்பு பணி நடைபெறும் போது, அதன் சேவை நிறுத்தப்படும்.
அதன்படி 3-வது மின்இழுவை ரெயிலில் பழைய கம்பிவடத்தை அகற்றிவிட்டு புதிய கம்பிவடம் மாற்றுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் ரூ.5 லட்சத்தில் 450 மீட்டர் நீளம் கொண்ட புதிய கம்பிவடம் பொருத்தப்பட்டது. இந்த பணிகள் நிறைவடைந்ததால் இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. பின்னர் 3-வது மின்இழுவை ரெயிலில் பக்தர்கள் பயணம் செய்யும் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. முன்னதாக சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கோவில் செயற்பொறியாளர் நாச்சிமுத்து, பொறியாளர் குமார் பார்த்திபன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story