தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 13 May 2022 8:01 PM IST (Updated: 13 May 2022 8:01 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 9962818888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி

புதிய மூடி வந்தாச்சு...

கோவை மாநகராட்சி 81-வது வார்டுக்கு உட்பட்ட தாமஸ் வீதியில் பொரிகார சந்து இணைப்பு சாலையில் சாக்கடை கால்வாய் மூடி உடைந்து கிடந்தது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது. இதுதொடர்பாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பழைய மூடி அகற்றப்பட்டு, புதிய மூடி போடப்பட்டு உள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகளுக்கும், ‘தினத்தந்தி’க்கும் நன்றி.

கணேசன், கோவை.

குண்டும், குழியுமான சாலை

கோவை வேலாண்டிபாளையம் ஆனந்தா ஹவுசிங் காலனி பகுதியில் சாலை வசதி சரிவர இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறியதோடு மண் சாலை போல காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். ஆகவே சாலை மற்றும் கால்வாய் வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காளி ரஞ்சித், கோவை.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

கோவை கீரணத்தம் கல்லுகுழி பகுதியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள சாலையோரத்தில் மலைபோல குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றவும் அதிகாரிகள் முன்வருவார்களா?

ராஜா, கோவை.


விபத்தில் சிக்கும் அபாயம்

கோவை சரவணம்பட்டி எஸ்.ஆர்.பி. மில்ஸ் எதிரே கவுமார மடாலயம் வழியாக சின்னவேடம்பட்டி செல்லும் இணைப்பு சாலை பழுதடைந்து மேடு, பள்ளமாக காட்சி அளிக்கிறது. மேலும் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட் பகுதிகளிலும் சரிவர மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் விபத்தில் சிக்கும் அபாயமும் நிலவுகிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலமுருகன், கோவை.

காட்டுப்பன்றிகள் தொல்லை

கோத்தகிரி காந்தி மைதானம் அருகே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கிடங்கு அமைந்து உள்ளது. இந்த வளாகத்தில் ஏராளமான காட்டுப்பன்றிகள் சுற்றித்திரிகின்றன. அவை ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்ய வைக்கப்பட்டு உள்ள உணவு பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் தொழிலாளர்கள் அச்சத்துடன் பணியாற்றும் நிலை உள்ளது. எனவே காட்டுப்பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த  வனத்துறையினர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவிந்தராஜ், கோத்தகிரி.

பழுதான மின்கம்பம்

கோவை சிங்காநல்லூர் சக்தி நகரில் சாலையோரத்தில் பழுதடைந்த நிலையில் மின்கம்பம் ஒன்று நிற்கிறது. சூறாவளி காற்று வீசும்போது, மின்கம்பம் சாய்ந்து விழும் நிலை காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பீதியுடன் செல்கின்றனர். அந்த மின்கம்பம் சாய்ந்தால், அசம்பாவித சம்பவம் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே விரைவாக அந்த மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அசார், கோவை.

விதிகளை மீறும் பஸ்கள்

கோவை-சத்தி சாலையில் செல்லும் தனியார் பஸ்களில் ஏர்ஹாரன் பயன்படுத்தப்படுகிறது. இவை அதிக ஒலி எழுப்புவதால், நோயாளிகள் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இது தவிர அந்த பஸ்கள் அதிவகேத்தில் இயக்கப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விதிகளை மீறும் தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரவணன், கோவை.

சாலையில் குழி

பொள்ளாச்சி மாட்டுச்சந்தை அருகே உள்ள சாலை பெயர்ந்து குழி ஏற்பட்டு உள்ளது. அந்த குழியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றன. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து, காயம் அடைந்து செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடனடியாக சாலையில் ஏற்பட்டு உள்ள அந்த குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணி, பொள்ளாச்சி.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

சரவணம்பட்டி அருகே விசுவாசபுரம் பகுதியில் சாலையோரத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. ஓடை போல தினமும் கழிவுநீர் ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே அங்கு கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

சார்லஸ், சரவணம்பட்டி.


Next Story