பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; மாணவர் உள்பட 2 பேர் பலி
கன்னியாகுமரியில் அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மோட்டார் சைக்கிளில் பயணம்
கன்னியாகுமரி அருகே உள்ள வடக்கு கரும்பாட்டூரைச் சேர்ந்தவர் துரை. இவருடைய மகன் சைஜின் (வயது 19). இவர் கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
இவரும், சாமிதோப்பு பகுதியைச் சேர்ந்த சொரிமுத்து மகன் தேவஜாஸ்பர் (20), தென்தாமரைகுளத்தைச் சேர்ந்த டேனியல் ஜெபராஜ் மகன் பிரவீன் (18) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் நான்கு வழிச்சாலை வழியாக கன்னியாகுமரி நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிளை சைஜின் ஓட்டினார்.
பஸ் மோதல்; 2 பேர் சாவு
கன்னியாகுமரி புதிய பஸ் நிலையம் முன்பு சென்றடைந்த போது எதிரே களியக்காவிளையில் இருந்து புறப்பட்ட பஸ் வந்தது.
இந்தநிலையில் புதிய பஸ்நிலையத்திற்குள் செல்வதற்காக பஸ் திரும்ப முயன்றது. அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளும், பஸ்சும் மோதிக் கொண்டன.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பஸ்சின் அடியில் சிக்கி கொண்டது. அதில் வந்த 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் படுகாயமடைந்த சைஜின், தேவ ஜாஸ்பர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.
பிரவீன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவரை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சோகம்
மேலும் இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காந்திமதி, சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பலியான 2 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் பலியான தேவ ஜாஸ்பர் கன்னியாகுமரியில் உள்ள ஒரு காய்கறி கடையில் வேலை பார்த்து வந்தார். காயம் அடைந்த பிரவீன் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த விபத்து தொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் மாணவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story