அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் கோவில் தேரோட்டம்
குளித்தலையை அடுத்த அய்யர்மலையில் உள்ள ரெத்தினகிரீசுவரர் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
குளித்தலை
திருக்கல்யாண வைபவம்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள ரெத்தினகிரீசுவரர் கோவில் காவிரியின் தென்கரையில் அமையப்பெற்றுள்ள சிவதலங்களில் முதன்மையானது. மேலும் பாடல் பெற்ற சிவத்தலமான இது பல்வேறு வகையிலும் சிறப்பு வாய்ந்தது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து அன்று இரவு உற்சவ மூர்த்தி புஷ்ப விமானத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதன் பின்னர் ஒவ்வொரு நாளும் பகலில் பல்லக்கிலும், இரவில் நந்தி, கமல வாகனம், பூத, சிம்ம, கைலாச, சேஷ, வெள்ளி ரிஷப வாகனம், காமதேனு, யானை, ஹம்ச, இந்திர, குதிரை வாகனம் மற்றும் புஷ்ப பல்லக்கில் சுரும்பார்குழலி உடனுறை ரெத்தினகிரீசுவரர் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைதொடர்ந்து 4 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இக்கோவில் மலையை சுற்றி தினந்தோறும் பகல் மற்றும் மாலை நேரங்களில் சாமியின் வீதிஉலா நடந்தது. கடந்த 9-ந் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
தேரோட்டம்
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு குதிரை மற்றும் புஷ்ப வாகனத்தில்சுவாமி வீதிஉலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி நேற்று சுரும்பார்குழலி உடனுறை ரெத்தினகிரீசுவரர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
பூக்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டது. இதையடுத்து அலங்கரிங்கப்பட்ட தேரில் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். காலை 6.30 மணிக்கு மேல் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இத்திருவிழாவையொட்டி இக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அன்னதானங்கள் வழங்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த பொருட்களை கோவில் தேரிலும், தேர் செல்லும் பகுதிகளிலும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் கொட்டி வந்தனர்.
நாளை நிலையை அடைகிறது
இக்கோவிலில் இருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) காலை இழுக்கப்பட்ட தேர் மீண்டும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை நிலையை அடைய உள்ளது. இந்த தேரோட்டத்தில் அரசியல் பிரமுகர்கள், ஊர்முக்கியஸ்தர்கள், கோவில் குடிபாட்டுகாரர்கள், பல்வேறு மாவட்டம் மற்றும் குளித்தலையை சுற்றியுள்ள பல்வேறு கிராமப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமிக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
Related Tags :
Next Story