குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக திறன் வளர்ப்பு பயிற்சி


குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக திறன் வளர்ப்பு பயிற்சி
x
தினத்தந்தி 13 May 2022 10:07 PM IST (Updated: 13 May 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

கரூர்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சியினை கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- நிமிர்ந்து நில் துணிந்து சொல் இயக்கம் மூலம் மாணவிகளுக்கு வாட்ஸ்-அப் எண் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 18 வயதிற்கு குறைவாக இருக்கின்ற பெண் குழந்தைகளுக்கு பிரசவம் தவிர்க்கப்பட வேண்டும். அதற்காக தொடர்ந்து குழந்தை திருமணம் கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டும். மிகச்சிறந்த மருத்துவ வசதிகள் இருந்தும் சிசு மரணங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அதற்கு காரணம் 18 வயதுக்குக் கீழே உள்ள பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதால்தான்‌. அப்படி 18 வயதிற்கு குறைவாக திருமணம் செய்துகொண்ட பெண் குழந்தைகள், குழந்தை பெற்றுக்கொண்டால் உடல் எடை, சத்து குறைவாக இருக்கும், இதனால் சிசு மரணங்கள் ஏற்படுகிறது. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நமது மாவட்டத்தில் 52 ஆயிரம் குழந்தைகள் படிக்கிறார்கள். அதில் 3 ஆயிரம் பெண் குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு வருகை தராமல் உள்ளார்கள். இதுமிகவும் மனவேதனை அளிக்கக்கூடிய நிகழ்ச்சியாகும். இதற்கு காரணம் இளம் வயது திருமணம் தான். சைல்டு லைன் தொலைபேசி எண் 1098 மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம். புகார்கள் வராத காரணத்தினால் நடவடிக்கை எடுக்காத சூழ்நிலை ஏற்படுகிறது. இனிமேல் வருகின்ற புகார்கள் மீது கண்டிப்பாக காவல்துறை மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. குழந்தை திருமணம் செய்து வைப்பவர்கள் அனைவர் மீதும் வழக்கு தொடுக்க கூடிய சட்ட உரிமை உள்ளது. 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று சட்டம் உள்ளது. இதை யாரும் கண்காணிப்பதில்லை. பெண்ணிற்கு 18 வயது நிறைந்து உள்ளது என்பதற்கான சான்று வழங்கிய பின்னரே திருமண மண்டபங்களில் முன்பதிவு செய்யப்படும் என்ற ஒரு சூழலையும் உருவாக்கியிருக்கிறோம், என்றார்.

Next Story