மாணவ-மாணவிகளுக்கான ஓவியப்பயிற்சி முகாம்
ராமநாதபுரத்தில் மாணவ-மாணவிகளுக்கான ஓவியப்பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம்,
தமிழக அரசு கலை பண்பாட்டு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகம் முழுவதும் செயல்பட்டுவரும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக உலக ஓவியர் தினத்தை முன்னிட்டு 5 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஓவியப் பயிற்சி பட்டறை நடத்திடவும், சென்னையில் மாநில அளவிலான கலைக்காட்சி நடத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஓவிய பயிற்சி முகாம்களில் மரபு சார்ந்த ஓவியங்கள், துணி ஓவியங்கள், பேப்பர் ஓவியங்கள், பானை, மரம் சார்ந்த ஓவியங்கள், வாட்டர் கலர் ஓவியங்கள், பென்சில் ஓவியங்கள் உள்ளிட்ட ஓவியங்களும் இடம் பெறும் வகையில் நடத்தப்பட உள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓவியப்பயிற்சி முகாம் வருகிற 19-ந் தேதி ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் டி.டி.விநாயகர் தொடக்கப் பள்ளியில் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறும் இந்த ஓவியப்பயிற்சி முகாமில் மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு அவற்றில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஓவியங்கள் மாநில அளவில் சென்னையில் நடைபெற உள்ள நிறைவு விழாவில் காட்சிக்கு வைக்கப்படும்.
இதில் 5 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவ-மாணவியர்கள் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ளும் பயிற்சியாளருக்கு வரைபட அட்டை வழங்கப்படும். வரைபட பொருட்கள், மதிய உணவு எடுத்து வர வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.. இந்த தகவலை மதுரை மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story