மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் செத்து மிதந்த கொக்கு
பெரம்பூரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கொக்கு ஒன்று செத்து மிதந்தது.
கொள்ளிடம்
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள குன்னம் ஊராட்சியை சேர்ந்த பெரம்பூர் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தின் மெயின் ரோடு பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் குடிநீர் சேகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெரம்பூர் கிராமத்தில் உள்ள பொதுக்குடிநீர் குழாய் மூலம் வரும் அந்த தண்ணீரை பொதுமக்கள் பிடித்து சமையல் செய்வதற்கும், குடிப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
பெண்கள் அதிர்ச்சி
வழக்கம்போல நேற்று பொதுக்குடிநீர் குழாயில் வந்த தண்ணீரை பெண்கள் குடங்களில் பிடித்துக் கொண்டிருந்தபோது தண்ணீருடன் புழுக்களும் வந்து விழுந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து தங்களது உறவினர்களிடம் தெரிவித்தனர்.
உடனே, அப்பகுதியை சேர்ந்த ஆண்கள் சிலர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மேல் ஏறி பார்த்தனர். அப்போது தொட்டியில் உள்ள தண்ணீரில் கொக்கு ஒன்று செத்து அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்தது. பின்னர் அதனை வெளியே எடுத்து அகற்றினர்.
சுத்தம் செய்ய கோரிக்கை
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேலே பறந்து சென்ற கொக்கு தண்ணீரில் தவறி விழுந்து செத்து இருக்கலாம், அல்லது தண்ணீர் குடிக்க வந்தபோது தொட்டியில் விழுந்து செத்து இருக்கலாம். இதனை யாரும் கவனித்து அகற்றாததால் செத்துப்போன கொக்கு அழுகி புழு வைத்து விட்டது. ஆகவே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள தண்ணீரை முழுவதுமாக அகற்றி பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்து அதன்பிறகு தண்ணீர் ஏற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story