தக்கலை அருகே பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் மோதல்; உள்ளிருப்பு போராட்டம் 2 பேர் காயம்
தக்கலை அருகே விலவூர் பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் காயமடைந்தனர். மேலும் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தக்கலை,
தக்கலை அருகே விலவூர் பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் காயமடைந்தனர். மேலும் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேரூராட்சி கூட்டம்
விலவூர் பேரூராட்சி கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு தலைவர் பில்கான் தலைமையில் தொடங்கியது. இதில் செயல் அலுவலர் ஜெசி றோஸ்லின் அன்புராணி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது தி.மு.க. மற்றும் பா.ஜனதா கவுன்சிலர்கள் எழுந்து, ‘கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பார்க்க வேண்டும்’ என கூறினர். இதையடுத்து தி.மு.க. கவுன்சிலர்கள் பிரைட்சிங் மற்றும் ஜூட்ஸ் பெர்லின் ஆகியோர் இடையே கைகலப்பு ஏற்பட்டு மோதலாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் தக்கியதாக தெரிகிறது.
இதில் காயமடைந்த 2 பேரும் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்றனர். அவர்களில் பிரைட்சிங் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
மேலும் இருவரும் தக்கலை போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். அந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
உள்ளிருப்பு போராட்டம்
இந்த நிலையில் பேரூராட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க. கவுன்சிலர்கள் கிரிஜா, பவித்ரா, தினேஷ்குமார் விஜயலெட்சுமி, சுதாபாய், பா.ஜனதா கவுன்சிலர்கள் ஜெயசெந்தில்குமார், கவிதா ஆகிேயார் கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், ‘கடந்த கூட்டத்தில் எங்களுக்கு தெரியாமல் தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். ஆகவே இந்த கூட்டத்தில் எங்கள் கையெழுத்து இல்லாமல் தீர்மானம் நிறைவேற்ற கூடாது. இதை செயல் அலுவலர் எழுதி கொடுக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தனர்.
பேச்சுவார்த்தை
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தலைவர் மற்றும் செயல் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இதனால், போராட்டம் இரவு 8 வரை தொடர்ந்தது.
இதனையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா, சப் -இன்ஸ்பெக்டர்கள் அருளப்பன், ராஜசேகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கவுன்சிலர்களின் புகார் தொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் பேரூராட்சி உதவி இயக்குனருக்கு மனு கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து இரவு 8.30 மணியளவில் போராட்டத்தை கைவிட்டுவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story