குழந்தை திருமணம் செய்தால் 2 ஆண்டுகள் சிறை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி எச்சரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி எச்சரிக்கை விடுத்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி எச்சரிக்கை விடுத்தார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் குழந்தை திருமண தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்தை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாணவிகள், ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று ஓராண்டு முடிந்ததையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை முற்றிலும் தடுப்பதற்காக மக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
தண்டனை
குழந்தை திருமணம் குற்றமென அனைவரும் உணர வேண்டும். குழந்தை திருமணம் வேண்டாம் என்பது பெண்ணின் உரிமை. குழந்தை உரிமையை பறிக்க கூடாது. குழந்தை திருமணம் செய்தால் சட்டத்தால் தண்டிக்கப்படுவீர். 18 வயது முடியும் முன் குழந்தை திருமணம் நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும். ஆணிற்கு 21 வயதிற்கு மேலும், பெண்ணிற்கு 18 வயதிற்கு மேலும் திருமணம் நடத்தப்பட வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்தால் 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். குழந்தைகளுக்கான உதவி எண் 1098 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் அனைவரும் குழந்தை திருமணத்தை தடுத்து, பெண் குழந்தைகளை பாதுகாத்து குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர். மாலதி நாராயணசாமி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர். கோவிந்தன், துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, தாசில்தார் சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story