காட்சி பொருளாக காணப்படும் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி


காட்சி பொருளாக காணப்படும் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி
x
தினத்தந்தி 14 May 2022 12:48 AM IST (Updated: 14 May 2022 12:48 AM IST)
t-max-icont-min-icon

நாகை ஒன்றியம் பெருங்கடம்பனூர் ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு 1½ ஆண்டுகள் ஆகியும் இன்னும் காட்சி பொருளாக காணப்படும் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி பயன்பாட்டுக்கு வருவது எப்போது? என்று அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

சிக்கல்
நாகை ஒன்றியம் பெருங்கடம்பனூர் ஊராட்சி இளம்கடம்பனூர் சிவன் கோவில் பகுதியில் சுமார் 120 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் குடிநீர் பிரச்சினையை போக்குவதற்காக குடிநீர் தொட்டி அமைத்துத்தர வேண்டும் என்று இதற்கு முன்பு பணிபுரிந்த நாகை கலெக்டரிடம் மனு கொடுத்து இருந்தனர். 
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 14-வது நிதிக்குழு(2020-21) திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிவன் கோவில் அருகே மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. 
காட்சி பொருளாக உள்ளது
இந்த குடிநீர் தொட்டி கட்டப்பட்டு 1½ ஆண்டுகள் ஆகியும் இன்னும்  திறக்கப்படாமல் உள்ளது. தங்களது கோரிக்கைக்கு தீர்வு கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சியில் திளைத்து இருந்த இந்த ஊராட்சி  பொதுமக்கள் கட்டி முடிக்கப்பட்டு 1½ ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளதால் மிகுந்த மனவேதனை அடைந்து உள்ளனர்.
தங்களது சிரமம் இன்னும் தொடர்ந்து வருவதாக தெரிவித்த இந்த ஊராட்சி பொதுமக்கள் கட்டி முடிக்கப்பட்ட குடிநீர் தொட்டி திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்படாமல் காட்சிப்பொருளாக காணப்படுவதாகவும் எனவே தொடர்புடைய அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story