பங்களாப்புதூர் அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்த தம்பதி; மனைவி பரிதாப சாவு - கணவருக்கு தீவிர சிகிச்சை
பங்களாப்புதூர் அருகே குடும்ப தகராறில் தம்பதி விஷம் குடித்தனர். இந்த சம்பவத்தில் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டி.என்.பாளையம்
பங்களாப்புதூர் அருகே குடும்ப தகராறில் தம்பதி விஷம் குடித்தனர். இந்த சம்பவத்தில் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விவசாயி
டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் கள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 34). விவசாயி.
இவருக்கும் கொங்கர்பாளையம் பகுதியை சேர்ந்த சின்னச்சாமி மகள் சரண்யா (28) என்பவருக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சரண்யா எம்.காம் முடித்து உள்ளார். இவர்களுக்கு கார்த்திகா என்ற 1½ வயது பெண் குழந்தை உள்ளது.
விஷம் குடித்தனர்
நேற்று முன்தினம் இரவு பங்களாப்புதூர் பகுதியில் மழை பெய்தது. இதனால் துவைத்து உலர வைத்திருந்த துணியை எடுத்து வீட்டிற்குள் வைக்குமாறு சரண்யாவிடம் ஈஸ்வரன் கூறியதாக தெரிகிறது.
இதுதொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஈஸ்வரன் ஆத்திரம் அடைந்து வீட்டில் வைத்திருந்த விஷத்தை குடித்ததாக கூறப்படுகிறது. இதை கண்ட சரண்யாவும், அதே விஷத்தை ஈஸ்வரனிடம் இருந்து பிடுங்கி குடித்துவிட்டார்.
சாவு
இதனால் கணவன், மனைவி 2 பேரும் மயங்கி விழுந்தனர். இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சரண்யா பரிதாபமாக இறந்தார்.
சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஈஸ்வரன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ஆர்.டி.ஓ. விசாரணை
இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சரண்யாவுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து கோபி ஆர்.டி.ஓ.வும் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
குடும்பத்தகராறு காரணமாக கணவன், மனைவி என 2 பேரும் விஷம் குடித்ததில், அதில் மனைவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Related Tags :
Next Story