பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 3.14 லட்சம் டன் கரும்பு அரைத்து சாதனை


பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 3.14 லட்சம் டன் கரும்பு அரைத்து சாதனை
x
தினத்தந்தி 14 May 2022 2:54 AM IST (Updated: 14 May 2022 2:54 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 3.14 லட்சம் டன் கரும்பு அரைத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் அரசுக்கு சொந்தமான பெரம்பலூர் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த சர்க்கரை ஆலையில் 2021-22-ம் ஆண்டிற்கான கரும்பு சர்க்கரை அரவை பணி கடந்த டிசம்பர் மாதம் 2-ந்தேதி தொடங்கியது. இடையே ஆலையின் எந்திரங்கள் கோளாறு காரணமாக 15 நாட்கள் கரும்பு சர்க்கரை அரவை பணி நடைபெறாமல் இருந்தது. இதையடுத்து எந்திர கோளாறு சரி செய்யப்பட்டு தொடர்ந்து கரும்பு அரவை பணி நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து ஆலையில் 2021-22-ம் ஆண்டுக்கான கரும்பு அரவை பணி நேற்று காலை 6 மணியுடன் நிறைவடைந்தது. ஆலையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 3 லட்சத்து 14 ஆயிரம் டன் கரும்பு அரைத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சத்து 98 ஆயிரம் மூட்டைகள் சர்க்கரை உற்பத்தியை எட்டியுள்ளது. சுமார் 13 ஆயிரத்து 500 டன் மொலாசஸ் கிடைத்துள்ளது. மேலும் சர்க்கரை கட்டுமானம் சராசரியாக 9.5 சதவீதம் கிடைத்துள்ளது. இதனால் இந்த ஆண்டு கரும்பு அரவையிலும், சர்க்கரை கட்டுமானத்திலும் தமிழ்நாட்டில் பெரம்பலூர் சர்க்கரை ஆலை 3-வது இடத்தை பிடித்துள்ளது.
இதுகுறித்து பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் அனைத்து கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் ஞானமூர்த்தி கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் பெரம்பலூர் சர்க்கரை ஆலை சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்தது. இந்த பருவத்தில் தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு சர்க்கரை ஆலைகள் மீது தனிக்கவனம் செலுத்தி கரும்பு விவசாயிகளுக்கு உரியகாலத்தில் பணப்பட்டுவாடா செய்ததால் பெரம்பலூர் சர்க்கரை ஆலை இப்படிப்பட்ட உயர்வான நிலைக்கு வந்துள்ளது. இதற்கு காரணமாக இருந்த தமிழக அரசுக்கும், ஆலை அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் கரும்பு விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம், என்றார். மேலும் பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு பதிந்து வெட்டப்படாமல் இருக்கும் சுமார் 5 ஆயிரம் டன் கரும்புகளை அருகே உள்ள சாத்தமங்கலம் கோத்தாரி சர்க்கரை ஆலைக்கு பெரம்பலூர் சர்க்கரை ஆலை நிர்வாக பொறுப்பிலேயே அனுப்பி வைக்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story