முந்திரி சாகுபடியில் சூறை நோய் தாக்குதலால் மகசூல் குறைந்தது


முந்திரி சாகுபடியில் சூறை நோய் தாக்குதலால் மகசூல் குறைந்தது
x
தினத்தந்தி 14 May 2022 2:56 AM IST (Updated: 14 May 2022 2:56 AM IST)
t-max-icont-min-icon

முந்திரி சாகுபடியில் சூறை நோய் தாக்குதலால் மகசூல் குறைந்தது.

மீன்சுருட்டி:

முந்திரி சாகுபடி
அரியலூர் மாவட்டத்தில் செந்துறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் மற்றும் மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் முந்திரி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இங்கு விளையும் முந்திரி பருப்புக்கு வெளிமாநிலங்களில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சம் ஏக்கரில் முந்திரி சாகுபடி நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு காரணங்களால் தற்போது சாகுபடி பரப்பு 30 ஆயிரம் ஏக்கராக குறைத்துள்ளது. இருப்பினும் ஆண்டுக்கு 9 ஆயிரம் டன் முந்திரி விளைகிறது.
இந்த ஆண்டு பருவநிலை சரியில்லாத காரணத்தால் முந்திரி சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் சூறை நோய் தாக்குதலால் காய்ப்பு திறன் குறைந்துள்ளது. முந்திரி மரங்களில் துளிர் மற்றும் பூ பூக்கும் நேரங்களில் விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு இரண்டு முறை மருந்து தெளிப்பார்கள். இதுபோன்று மருந்து தெளித்தும் சூறை நோய் தாக்குதலால் விளைச்சல் இல்லாமல் போனது. பெரும்பாலான பகுதியில் விளைச்சல் குறைந்தது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
காய்ந்து, கருகின
ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 8-ல் இருந்து 12 மூட்டை வரை முந்திரி விளைச்சல் தரும். ஆனால் இந்த ஆண்டு பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏக்கர் ஒன்றுக்கு ஒரு மூட்டை மகசூல் கிடைப்பதே அரிதாகிவிட்டது. மேலும் ஏக்கர் ஒன்றுக்கு இரண்டு முறை மருந்து தெளிப்பதற்கே சுமார் ரூ.10 ஆயிரம் வரை செலவாகும் என்றும், இந்தாண்டு மருந்து தெளித்த செலவிற்கு கூட வருமானம் இல்லாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். சூறை நோய் தாக்குதலால் கிளைகள், பூக்கள் ஆகியவை காய்ந்து கருகிய நிலையில், இந்த நோயினால் தாக்கப்பட்ட மரங்கள் சுமார் 3 ஆண்டுகளுக்குப் பின்னரே காய்ப்புக்கு வரும் என்றும் விவசாயிகள் கூறினர்.
ேமலும் முந்திரி சாகுபடி செய்கின்ற விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், உடனடியாக அரியலூர் மாவட்டத்தில் முந்திரி சாகுபடி செய்கின்ற அனைத்து விவசாயிகளின் வயல்களுக்கும் நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலவச முந்திரி மரக்கன்றுகள்
மேலும் இந்த மாவட்டத்தில் முந்திரி சாகுபடி பரப்பு குறையாமல் அதிகப்படுத்த வேண்டும், விவசாயிகளுக்கு தரமான இலவச முந்திரி மரக்கன்றுகள் வழங்க வேண்டும், மாவட்டத்தில் முந்திரிப்பருப்பை பிரித்தெடுக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பதும் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Next Story