அதிநவீன காவல் சோதனை சாவடி திறப்பு


அதிநவீன காவல் சோதனை சாவடி திறப்பு
x
தினத்தந்தி 14 May 2022 5:48 PM IST (Updated: 14 May 2022 5:48 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிநவீன காவல் சோதனை சாவடி திறக்கப்பட்டது.

திருச்சி, மே.15-
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிநவீன காவல் சோதனை சாவடி திறக்கப்பட்டது.
காவல் சோதனை சாவடி
திருசசி மாநகரத்தில் குற்றங்களை முன்கூட்டியே தடுக்கும் பொருட்டு திருச்சி நகருக்குள் வரும் வாகனங்களையும், வெளியேறும் வாகனங்களையும் சோதனை செய்வதற்காக திருச்சி மாநகர எல்லையில் ஏற்கனவே 9 காவல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் என்ற பகுதியில் ஏற்கனவே காவல் சோதனை சாவடி எண்-2 அமைக்கப்பட்டு வாகன தணிக்கை செய்யப்பட்டு வந்தது.
இந்தநிலையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தலின்பேரில், திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை, புதுக்கோட்டை- திருச்சி செல்லும் சுற்று வட்ட சாலை அருகில் உள்ள எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சப்பூர் நான்குரோடு சந்திப்பில் காவல் சோதனை சாவடி எண்-2 அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
அமைச்சர் திறந்து வைத்தார்
இதனை தொடர்ந்து மேற்குறிப்பிட்ட இடத்தில் வாகன எண்களை கண்டறியும் தானியங்கி கேமராக்கள்-2, சி.சி.டி.வி. கேமராக்கள்-4 மற்றும் பொது முகவரி அமைப்பு ஒலிபெருக்கிகள், சூரிய மின்சார விளக்குகளுடன் கூடிய இரும்பு தடுப்பான்கள், தடையில்லா மின்சார வசதி, கழிப்பறை ஆகிய அம்சங்களுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த அதிநவீன காவல் சோதனை சாவடி எண்-2ன் புதிய கட்டிடத்தை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், போலீஸ் துணை கமிஷனர் (தெற்கு) முத்தரசு, போலீஸ் உதவி கமிஷனர் அஜய்தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதிநவீன காவல் சோதனை சாவடி எண்-2 இந்த பகுதியில் நிறுவப்பட்டதால் திருச்சி நகருக்குள் வரும் வாகனங்களையும், வெளியேறும் வாகனங்களையும், போலீசார் வாகன சோதனை செய்து, குற்றங்களை முன்கூட்டியே தடுக்க ஏதுவாக அமைந்துள்ளது என்று மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

Next Story