மருத்துவ சோதனையில் ‘ஆண்' என தெரியவந்த இளம்பெண்ணுக்கு போலீஸ் வேலை- அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
மருத்துவ சோதனையின் போது ‘ஆண்' என தெரியவந்த இளம்பெண்ணுக்கு போலீஸ் வேலை வழங்க பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
மருத்துவ சோதனையின் போது ‘ஆண்' என தெரியவந்த இளம்பெண்ணுக்கு போலீஸ் வேலை வழங்க பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ சோதனையில் அதிர்ச்சி
நாசிக் ஊரக போலீசுக்கான ஆள்தேர்வு கடந்த 2018-ம் ஆண்டு நடந்தது. இதில் 19 வயது இளம்பெண் 200-க்கு 171 மதிப்பெண் பெற்றிருந்தார். எனினும் அவர் போலீஸ் வேலைக்கு தேர்வு செய்யப்படவில்லை. இதுகுறித்து அவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு இருந்தார்.
அப்போது, போலீஸ் தேர்வின் போது இளம்பெண்ணுக்கு நடந்த மருத்துவ சோதனையில் அவர் ‘ஆண்' என்பது தெரியவந்ததால் அவருக்கு வேலை வழங்கப்படவில்லை என தெரியவந்தது.
இதையறிந்து சிறு வயது முதலே போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவா் தனக்கு போலீசில் வேலை வழங்க வேண்டும் என மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
ஐகோர்ட்டில் மனு
மனுவில் " இளம்பெண் தான் பிறந்தது முதலே பெண்ணாகவே வாழ்ந்து வருகிறேன். எனது பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் நான் பெண் என தான் கூறுகின்றன. போலீஸ் தேர்வின் போது நடந்த மருத்துவ சோதனைக்கு பிறகு தான் எனக்கு குரோமோசோம் பிரச்சினை இருப்பதே தெரியவந்தது" என கூறியிருந்தாா்.
இதேபோல இளம்பெண் தனது குடும்பத்தின் ஏழ்மை நிலை குறித்தும் மனுவில் உருக்கமாக கூறியிருந்தார்.
இதுதவிர மனுவை விசாரித்த நீதிபதிகள ரேவதி மோகிதே, மாதவ் ஜாம்தார் ஆகியோர் கடந்த 6-ந் தேதி இளம்பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது இளம்பெண் பி.ஏ. பட்டப்படிப்பை டிஸ்டிங்ஷனில் (85 சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல்) முடித்தது தெரியவந்தது.
கருணை அடிப்படையில் வேலை
இதையடுத்து நீதிபதிகள், " இது மிகவும் துரதிருஷ்டமான சம்பவம். மனுதாரர் சமூகத்தின் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து வந்து உள்ளார். அவரது பெற்றோர் கரும்பு வெட்டும் கூலித்தொழில் செய்கின்றனர். இவர் தான் வீட்டின் மூத்த மகள். அவருக்கு 2 தங்கை, ஒரு தம்பி உள்ளனர். மனுதாரர் எந்த தவறும் செய்யவில்லை. அவரை பொறுத்தவரை அவருக்கு பெண்ணுக்கான அனைத்து பண்புகளும் உள்ளன " என கூறினர்.
மேலும் கருணை அடிப்படையில் இளம்பெண்ணுக்கு போலீஸ் வேலை கொடுக்க பரிந்துரை செய்யுமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து மாநில அரசின் அட்வகேட் ஜெனரல் அசுதோஷ் கும்பகோனி இளம்பெண்ணுக்கு கருணை அடிப்படையில் போலீஸ் வேலை வழங்குவது குறித்து அரசு பரிசீலிப்பதாக கூறினார். இதையடுத்து இந்த விவகாரத்தில் 2 மாதங்களுக்குள் முடிவு எடுக்க மாநில அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மனு மீதான விசாரணையை ஜூலை 25-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Related Tags :
Next Story