ஆட்டு எருவுக்குள் 4 கிலோ கஞ்சா பதுக்கியவர் கைது


ஆட்டு எருவுக்குள் 4 கிலோ கஞ்சா பதுக்கியவர் கைது
x
தினத்தந்தி 14 May 2022 6:17 PM IST (Updated: 14 May 2022 6:17 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே ஆட்டு எருவுக்குள் 4 கிலோ கஞ்சா பதுக்கி வைத்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள், ரூ.48,940 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தேனி:

கஞ்சா விற்பனை

தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே மேற்பார்வையில் கஞ்சா தடுப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர், மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா கடத்தலை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் தேனி அருகே டொம்புச்சேரி கிராமத்தில், கஞ்சா விற்பனை செய்வதாக இந்த தனிப்படைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான தனிப்படையினர் டொம்புச்சேரி கிராமத்துக்கு நேற்று சென்றனர். 

அப்போது அதே ஊரை சேர்ந்த சதீஷ் (வயது 40) என்பவர், தனது வீட்டின் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டு இருந்தார். போலீசாரை பார்த்ததும் அவர் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர்.

ஆட்டு எருவுக்குள் பதுக்கல்

அப்போது அவரிடம் சுமார் 100 கிராம் எடையில் சிறு, சிறு கஞ்சா பொட்டலங்களும், காலையில் இருந்து கஞ்சா விற்பனை மூலம் கிடைத்த ரூ.48 ஆயிரத்து 940-ம் இருந்தது. பின்னர் அவருடைய வீட்டுக்குள் போலீசார் சோதனையிட்டனர். ஆனால், வீட்டுக்குள் கஞ்சா எதுவும் இல்லை. 

வீட்டின் முன்பு உள்ள ஆட்டுக் கொட்டகையிலும் போலீசார் சோதனையிட்டனர். அப்போது ஆட்டின் எரு குவித்து வைக்கப்பட்டிருந்தது. அதைப்பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார், அந்த எரு குவியலில் தேடிப் பார்த்தனர். 

சுமார் 3 அடி ஆழத்துக்கு தோண்டிப்பார்த்த போது, அதற்குள் 2 பொட்டலங்களில் 4 கிலோ அளவுக்கு கஞ்சா இருந்தது. அந்த கஞ்சா உள்பட மொத்தம் 4 கிலோ 100 கிராம் கஞ்சாவையும், ரூ.48 ஆயிரத்து 940 மற்றும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய வாகன பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளையும் தனிப்படையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் சதீஷ் மற்றும் பறிமுதல் செய்த பொருட்களை பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் தனிப்படையினர் ஒப்படைத்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்தார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story