4 வழி சாலைக்கு கையகப்படுத்தும் இடத்திற்கு உரிய இழப்பீடு


4 வழி சாலைக்கு கையகப்படுத்தும் இடத்திற்கு உரிய இழப்பீடு
x
தினத்தந்தி 14 May 2022 8:52 PM IST (Updated: 14 May 2022 8:52 PM IST)
t-max-icont-min-icon

4 வழி சாலைக்கு கையகப்படுத்தும் இடத்திற்கு உரிய இழப்பீடு

மடத்துக்குளம்:
மடத்துக்குளம் பகுதியில் நான்கு வழி சாலைக்காக கையகப்படுத்தும் இடத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
4 வழிச்சாலை
மடத்துக்குளம் பகுதியில் பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையிலான நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ரோடு அமைக்க மைவாடி, பாலப்பட்டி, வேடப்பட்டி, கழுகரை உள்ளிட்ட பல கிராமப்பகுதியில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மடத்துக்குளத்திலிருந்து கணியூர் செல்லும் ரோட்டில் உள்ள அருள்புரம் பகுதியில் கையகப்படுத்தும் பணி நடக்கிறது.
இதுகுறித்து இங்கு வசிக்கும் மக்கள் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-
மடத்துக்குளம் தாலுகா அருள்புரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ளவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்த இடத்தை முறையாக கிரையம் செய்து தற்போது வீடு கட்டி வசித்து வருகிறோம். சிலர் காலி மனைகளாக பராமரித்து வருகின்றனர். தற்போது இந்த இடத்தில் நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடக்கிறது.
கோரிக்கை 
 இதனால் இங்குள்ள வீடுகள் இடிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. ஆனால் இதுவரை நிலம் கையகப்படுத்துவதற்கான எந்த இழப்பீடும் எங்களுக்கு வழங்கவில்லை. இங்கு வசிப்பவர்கள் வாழ்நாளில் சேமித்த பணத்தை வைத்து இங்கு இடத்தை வாங்கி வீடு கட்டி உள்ளோம். எங்களின் நிலை குறித்தும் சிரமம் குறித்தும் கடந்த 3 ஆண்டுகளாக பலமுறை அரசுத்துறையினருக்கு நேரில் சென்று வலியுறுத்தியும், மனு அனுப்பியும் எங்கள் கோரிக்கையை தெரிவித்து வருகிறோம். ஆனால் இதுவரை இழப்பீடு கிடைக்கவில்லை. எங்கள் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story