2011-ம் ஆண்டில் இருந்தே சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு; பரபரப்பு தகவல்கள்


2011-ம் ஆண்டில் இருந்தே சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு;  பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 14 May 2022 3:24 PM GMT (Updated: 14 May 2022 3:24 PM GMT)

கர்நாடகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதலே சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

எஸ்.ஐ. தேர்வு முறைகேடு

  கர்நாடகாவில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை இவ்வழக்கில் 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இவ்வழக்கில் ஆள்சேர்ப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தகுமாரும் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரைப் பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

  இந்த நிலையில் 2011-ம் ஆண்டு முதலே சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. 2011-ம் ஆண்டு முதல் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக சாந்தகுமார் சி.ஐ.டி. அதிகாரிகளிடம் கூறியதாக தகவல்கள் வெளியாக உள்ளது. போலீஸ் அதிகாரி சாந்தகுமார் இந்த முறைகேட்டில் தொடர்ந்து ஈடுபட்டது சி.ஐ.டி. விசாரணையில் தெரியவந்துள்ளது.

அரசியல்வாதிகளுக்கு தொடர்பு

  ஒவ்வொரு முறையும் முறைகேடுகள் செய்ததன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் 2011-ம் ஆண்டு முதல் நடைபெற்ற முறைகேட்டில் பல்வேறு இடைத்தரகர்கள், அரசியல் பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டதும் தெரியவந்திருக்கிறது. அவர்களும் விரைவில் சிக்குவார்கள் என்று சி.ஐ.டி. போலீசார் கூறினர்.

  சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதாகி உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தகுமார் 1996-ம் ஆண்டு பெங்களூருவில் சாதாரண போலீஸ்காரராக நியமிக்கப்பட்டுள்ளார். பின்னர் அசுர வேகத்தில் படிப்படியாக பதவி உயர்வு பெற்று தற்போது துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தார். இவ்வழக்கில் இன்னும் பல தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக சி.ஐ.டி. போலீசார் கூறினர்.

Next Story