சுத்தம் செய்த இடத்தில் மீண்டும் குப்பைகள் கொட்டும் அவலம்
சுத்தம் செய்த இடத்தில் மீண்டும் குப்பைகள் கொட்டும் அவலம்
உடுமலை:
உடுமலை நகர எல்லையில் பொள்ளாச்சி சாலையில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டும், அங்கு மீண்டும் குப்பைகள் கொட்டப்படுகிறது.
குப்பைகள்
உடுமலை நகரில் பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மின் மயானத்தை அடுத்துள்ள இடத்தில் சாலையோரம் மூட்டை மூட்டையாக குப்பைகள், இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. இரவு நேரம் மட்டுமல்லாது பகல் நேரத்திலேயே வாகனங்களில் கொண்டுவந்து கொட்டப்படுவதாகக்கூறப்படுகிறது.
இந்த குப்பைகள் அந்த பகுதியில் நீண்ட தூரத்திற்கு கொட்டப்படுகின்றன. அங்கு அந்த குப்பைகளை நாய்கள் கிளறுகின்றன. அவை இறைச்சிக்கழிவுகளை சாலைபகுதிக்கு இழுத்து வந்து போடுகின்றன. குப்பைகள் காற்றில் பறப்பதால் சில நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்கிறவர்கள் மீது விழுகிறது.
துர்நாற்றம்
அந்த பகுதியை பொதுமக்கள் நடந்தும், இருசக்கர வாகனத்திலும் கடந்து செல்லும்போது துர்நாற்றத்தால் குமட்டி வாந்தி எடுக்கும் நிலை ஏற்படுகிறது. அத்துடன் குப்பைகள் அந்த பகுதியில் உள்ள நீர்வழித்தடங்களிலும் சிதறிக்கிடக்கிறது. அதனால் அந்த பகுதியில் சுகாதாரம் கெடுகிறது. மேலும் வெளியூர்களில் இருந்து உடுமலைபகுதிக்கும், வெளியூர்களுக்கும் செல்கிறவர்கள் அந்த இடத்தை கடந்து செல்லும்போது நகர எல்லையில் கொட்டிக்கிடக்கும் குப்பைகளால் அருவறுப்புடன் செல்கின்றனர்.
அதனால் நகர எல்லையான அந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவதைத்தடுப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் நகராட்சிக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்த இடத்தில் குவிந்து கிடந்த குப்பைகள், பல்வேறு கழிவுப்பொருட்கள் ஆகியவற்றை முழுவதுமாக அப்புறப்படுத்தி சுத்தம் செய்தது.ஆனால் அந்த இடம் சில நாட்கள் மட்டுமே குப்பைகள் கொட்டப்படாமல் சுத்தமாக இருந்தது.நாட்கள் செல்ல செல்ல சிறிது சிறிதாக குப்பைகளை கொட்ட ஆரம்பித்தனர்.
மீண்டும் கொட்டப்படும்
முன்பு போன்றே இப்போது மீண்டும் அந்த இடத்தில் குப்பைகள் மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டப்பட்டு வருகின்றன. அங்கு குப்பைகள் குவிந்தும், சிதறியும் கிடக்கிறது.சில ஊராட்சி பகுதிகளில் பொது இடங்களில் குப்பைகளை கொட்ட வரும் வாகனங்களுக்கு அந்தந்த ஊராட்சி நிர்வாகம் அபராதம் விதித்து வருகிறது. அதுபோன்று இந்த இடத்தில் குப்பைகளை யார் கொண்டு வந்து கொட்டுகிறார்கள் என்று நகராட்சி நிர்வாகம் தரப்பில் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்போதுதான் அந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை கட்டுப்படுத்த முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
Related Tags :
Next Story