பட்டப்பகலில் துணிகரம்: தொழிற்சாலை அதிகாரி வீட்டில் 41 பவுன் தங்க நகைகள் கொள்ளை
திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் தனியார் தொழிற்சாலை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 41 பவுன் தங்க நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த புட்லூர், உல்லாச நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 32). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர், நேற்று மதியம் தனது குடும்பத்துடன் வீட்டைப் பூட்டிவிட்டு, வெள்ளவேடு பகுதியில் உள்ள உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். மீண்டும் வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 41 பவுன் தங்க நகை மற்றும் ரூ.6 லட்சம், அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.
இந்த திருட்டு குறித்து ஸ்ரீதர் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரீனா மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர். திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் தனியார் நிறுவன அதிகாரியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story